புவிசார் குறியீடு சிறப்பு அஞ்சல் உறைகள் குறித்த சொற்பொழிவு

புவிசார் குறியீடு  சிறப்பு அஞ்சல் உறைகள் குறித்த  சொற்பொழிவு
சிறப்பு சொற்பொழிவு நிகழ்வு

புவிசார் குறியீடு பொருட்களுக்கான சிறப்பு அஞ்சல் உறைகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியானது, திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில், திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நூலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். அஞ்சல் தலை சேகரிப்பாளர் மதன், புவிசார் குறியீடு சிறப்பு அஞ்சல் உறை குறித்து சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். அவர் பேசியதாவது:

“ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு (Geographical indication) எனப்படும். இந்த குறியீடு, அந்தப் பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும். இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை, சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.

உலக வணிக அமைப்பின் (WTO) உறுப்புநாடான இந்தியாவில் புவிசார் குறியீடுகள் சட்டம் (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம்) ஆண்டு, 1999 நிறைவேற்றப்பட்டு செப்டம்பர் 2003-ல் நடைமுறைக்கு வந்தது. இந்தியாவில் பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்புக்கு இந்த சட்டம் வழிவகுக்கிறது.

இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் அதன் நிலப் பகுதிக்கேற்ப தனித்தனி பண்புகள், அடையாளங்கள் கொண்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பகுதிசார் பொருட்களின் விளைச்சல், அப்பகுதி மக்களின் தொழில்கள் மூலம் அப்பகுதி இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழ்கின்றன.

தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் மாம்பழம் மற்றும் வெண்பட்டு, மதுரை மாவட்டம் மல்லிகைப்பூ, சுங்குடி சேலை, திண்டுக்கல் மாவட்டம் பழனி பஞ்சாமிர்தம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலை மிட்டாய், திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பாய், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்டாங்கி சேலை, காஞ்சிபுரம் மாவட்டம் பட்டு புடவைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளன.

மேலும், திண்டுக்கல் மாவட்டம் பூட்டு, திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பாய், ஈரோடு மாவட்டம் பவானி ஜமுக்காளம், திருவண்ணாமலை மாவட்டம். ஆரணி பட்டு, திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மலை வாழை, தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோயில் குத்துவிளக்கு, திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சுங்குடி சேலை, கொடைக்கானல் மலைப் பூண்டு, தேனி ஏலக்காய், கோவை கோரா காட்டன், மாமல்லபுரம் கற்சிற்பம், ஆரணி பட்டு, உதக மண்டலம் தோடா எம்ராய்டரி உட்பட பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் சிறப்பு அஞ்சல் உறை, அஞ்சல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. ‘இந்தியா - 75’ திட்டத்தை நினைவுகூரும் விதமாகவும், ‘ஆத்மநிர்பர் பாரத்’ அங்கீகாரத்தின் அடையாளமாகவும், தமிழக அஞ்சல் துறை சார்பில், புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய அளவில் பல பிரிவுகளைச் சார்ந்த 365 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் புவிசார் குறியீடு பெற்றது, டார்ஜிலிங் தேயிலை தான். இதுவரை கர்நாடகா 47 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று முதலிடத்திலும், 39 பொருட்களுடன் தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்தக் குறியீடு வாயிலாக, அந்த பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு கிடைக்கிறது. அஞ்சல் துறை சார்பில் 26 பொருட்களுக்கு, மண்டலம் வாரியாக அஞ்சல் உறைகள் வெளியிடப் பட்டுள்ளன” என்று மதன் தனது உரையில் விளக்கினார். முன்னதாக முகமது சுபேர் வரவேற்க, இறுதியில் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.