
தமிழகத்தில் கஞ்சா விபாயாரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் காவல் துறை பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கஞ்சா விற்பனை குறித்து தகவல் கொடுக்க பிரத்யேக வாட்ஸ்-அப் எண்ணும் அறிமுகப்பட்டுள்ளது. இந்நிலையில் குமரியில் விற்பனை செய்வதற்காக, மும்பையிலிருந்து சொகுசு காரில் கஞ்சா கடத்திவந்த காவல் துறை உதவி ஆய்வாளரின் கணவர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அழகிய மண்டபம் அருகே, காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மகாராஷ்டிர மாநில பதிவெண் கொண்ட வாகனத்தை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது காருக்குள் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் காரில் கஞ்சாவைக் கடத்தி வந்தது திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த மனோஜ் மற்றும் செல்வின் என்பது தெரியவந்தது. அடிப்படையில் செல்வின் பளுதூக்கும் வீரர். குமரியிலிருந்து மும்பைக்குச் சென்றவர் அங்குள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் பயிற்றுநராக இருந்துள்ளார். ஜிம்முக்கு வந்த பெண் எஸ்.ஐ-யைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தன் மனைவியின் மூலம், கஞ்சா விற்பனைக் கும்பலோடு செல்வினுக்கு அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து அவர் தனது நண்பரும், சக பயிற்றுநருமான மனோஜையும் கூட்டு சேர்த்துக்கொண்டு குமரி, கேரளத்தில் கஞ்சா விற்பனை செய்துவருவது தெரியவந்தது. கைதான மனோஜ், செல்வின் ஆகியோரிடம் இருந்து நான்கரை கிலோ கஞ்சா, 36 ஆயிரம் ரூபாய் ரொக்கம், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.