கரோனா தொற்றில் இருந்து பலரை மீட்ட சித்த மருத்துவம்
கபசுர குடிநீர் வினியோகிக்கும் குமரி ஆட்சியர் அரவிந்த்

கரோனா தொற்றில் இருந்து பலரை மீட்ட சித்த மருத்துவம்

குமரிமாவட்ட ஆட்சியர் பெருமிதம்

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பலரையும் சித்த மருத்துவ சிகிச்சை முறைகள் மீட்டுள்ளதாக குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குமரி ஆட்சியர் அரவிந்த் காமதேனு இணையதளத்திடம் கூறுகையில், ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் சித்தா கரோனா சிகிச்சை மையம் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, இரண்டாம் அலையின் தொடக்கத்திலேயே ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரி வளாகத்தில் 240 படுக்கைகள் கொண்ட மையத்தில் சித்த மருத்துவ சிகிச்சைக்கான 50 படுக்கைகள் வழங்கப்பட்டு செயல்பட தொடங்கியது.

இச்சிகிச்சை மையத்தில் நோயாளிகளின் உடல் வலியை போக்கும் வகையில், அவர்களது உடலை தேற்ற அமுக்குரா மாத்திரையும், கபத்தை (சளி) குறைத்து வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் தீர்க்க அதிமதுர மாத்திரை, தொண்டை வலி மற்றும் தொண்டை கரகரப்பு நீக்குவதோடு கபத்தை இளக்கி வெளியேற்ற ஆடாதோடை, மணப்பாகு இருமலுடன் கூடிய காய்ச்சலுக்கு வசந்த குசுமாகர மாத்திரை, பிரமானந்த மாத்திரை ஆகிய உள் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், கபசுர குடிநீர் காலையும், மாலையும் என இருமுறை உட்கொள்ளும்போது நமது உடலில் நோய் எதிர்பாற்றலை அதிகரிக்கவும், நுரையீரலை தேற்றவும் வழிவகை செய்தது. வெளி மருத்துவ சிகிச்சையில் கைகால் வலி தலைவலிக்கு பெயின்பாம், தலைபாரம், தலை நீரேற்றம் குறைய மஞ்சள் திரிபுகை மற்றும் தலை உச்சியில் வைக்க ராஸ்னாதி சூரணம் மற்றும் நொச்சி இலை, மஞ்சள் இவற்றை கொண்டு நீராவி சிகிச்சை வழங்கப்பட்டது. சுவை, மணம் குறைவு ஏற்பட்டவர்களுக்கு முக கவசத்திற்குள் இட்டு கொள்ள ஓமபொட்டணம் வழங்கப்பட்டது. அனைவருக்கும் சுவாச பாதை சீராக்கி மூச்சு விடுவதில் சிரமம் நீக்குவதிலும் ஓமபொட்டணம் சிறப்பாக பயன்பட்டது.

சித்த மருத்துவ மையத்தில் மூச்சுப்பயிற்சி
சித்த மருத்துவ மையத்தில் மூச்சுப்பயிற்சி

மதியம் உணவு அருந்திய பின் நோயாளிகளுக்கு கிராம்பு, ஓமம், பனங்கற்கண்டு மற்றும் தாளிசாதி வடக மாத்திரை வைக்கபட்ட தாம்பூலம் வழங்கப்பட்டது. இது கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளான நோயாளிகளுக்கு அஜீரணம் போன்ற சீரண மண்டல உபாதைகளும், நுரையீரல் பாதிப்பு அதிகரிக்காமலும் பாதுகாக்கிறது. இவற்றோடு நோயாளிகளுக்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த யோகா பயிற்சி காலை நேரத்தில் வழங்கப்பட்டது. நுரையீரலை பலப்படுத்தி மூச்சு விடுவதில் சிரமம் குறைக்க திருமூலர் பிராணாயாமம், மன அழுத்தம் நீங்க யோக நித்திரை பயிற்சிகள் வழங்கப்பட்டது. கொரோனா நோயின் முக்கிய விளைவான தாக்கத்தை குறைக்க முத்திரை பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க லிங்க முத்திரை பயிற்சி சிறப்பாக அளிக்கப்பட்டது. நோயாளர்களுக்கு காந்தி சுட்டிகை (வெயிலிற் காய்தல்) முக்கியத்துவம் விளக்கபட்டு கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நோயாளிகள் நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கவும் உடலை தேற்றவும் அமுக்கரா மாத்திரை மற்றும் நெல்லிக்காய் லேகியம் அடங்கிய ஆரோக்கியம் பெட்டகம் வழங்கப்பட்டது. வேறு தொற்று நோய்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க கையில் காப்பாக “ வசம்பு காப்பு கயிறு” கட்டிவிடப்பட்டது. இவற்றோடு வீடு திரும்பிய பின் உணவு முறைகளில் மந்தம் இல்லாத உணவுகள் எடுத்துக் கொள்ளவும் ஆலோசனை வழங்கப்பட்டது பால் பொருட்கள். இனிப்பு பொருட்கள், தயிர், பகல் தூக்கம், இரவில் கண் விழித்தல் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது.

இச்சிகிச்சை மையத்தில் 339 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு நன்முறையில் சிகிச்சை பெற்று நலமாகி வீடு திரும்பினர். 7 நோயாளிகள் மட்டும் மேற்சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் உயர் சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றோர் தீவிர நிலைக்கு செல்லாமல் தடுக்கப்பட்டதோடு, நோய் தொற்றில் இருந்து விரைவில் குணமடைந்து சென்றனர்.

மூன்றாவது அலையில் குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாத்திடும் வகையில், உடற்பயிற்சிக்கு உரிய முக கவசம் அணிந்து நடை பயிற்ச்சிக்கு அழைத்து செல்லலாம். வெயிலோடு விளையாடும் போது அதிக அளவில் வைட்டமின் D கிடைக்கும். இதற்கு மாலை வெயிலில் சைக்கிள் ஓட்ட அனுமதிக்கலாம். உறக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இரவு நேரம் விரைவில் தூங்கி காலையில் சீக்கிரம் எழ செய்யலாம். தூங்க செல்லும் போது பசும்பாலுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து அருந்த செய்யலாம்.

இவை தவிர கஸ்தூரி மாத்திரை, பால சஞ்சிவி மாத்திரை, தாளிசாதி சூரணம், சீந்தில் அதிமதுரம் சேர்ந்த மருந்துகளையும் பஞ்சமுட்டி கஞ்சி, நெற்பொரிகஞ்சி, சுக்கு கஞ்சி, போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனைபடி தேவையானபோது கொடுக்கலாம். உணவாக விட்டமின் C சத்துள்ள பழ வகைகள், Zinc சத்துள்ள வேர்கடலை நேந்திரம் பொடியில் ஏலம் சுக்கு கற்கண்டு சோர்த்து கொடுக்கலாம். விட்டமின் C, A,b3, b6> இரும்பு சத்து பாஸ்பரஸ் சத்துள்ள இலந்தை பழம் சாப்பிட வேண்டும். இவ்வாறு கொரோனா தொற்றிலிருந்து குழந்தைகளை காப்போம் மூன்றாவது அலையை பயமின்றி கடப்போம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in