
பொதுவாக, குறும்படங்கள் யூடியூப் தளத்திலும், சிடி வடிவிலும் ஏன் ஓடிடி தளத்தில்கூட வெளியாகும். ஆனால், திருநெல்வேலி அலங்கார் சினிமாஸ் திரையரங்கில், ‘கேர்ள்ஸ் ஹேக்கர்’ எனும் விழிப்புணர்வுக் குறும்படம் இன்று திரையிடப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இக்குறும்படத்தில் பணியாற்றிய எம்.வி.ஆர் இதுகுறித்து ‘காமதேனு’ இணையளத்திடம் பேசுகையில், “பொதுவாகவே எனக்கு சமூகம் சார்ந்த விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபடுவது மிகவும் பிடிக்கும். இதற்கென திருநெல்வேலியில் உள்ள நண்பர்கள் ஒன்றுசேர்ந்து, ‘குட் தாட் கிரியேஷன்ஸ்’ எனும் பெயரில் தயாரிப்புக் கூடம் தொடங்கினோம். எங்களிடம் இருந்த பணத்தைக் கொண்டு, இந்த விழிப்புணர்வு குறும்படத்தை எடுத்தோம்.
30 நிமிடங்களுக்கு நீளும் இந்தக் குறும்படம், செல்போனின் இன்னொரு பக்கத்தைப் பேசும். இன்று அனைவரது கையிலும் செல்போன்கள் உள்ளன. ஆரம்பத்தில் எல்லாம் குழந்தைகளின் கண்பார்வை கெட்டுவிடும் என்பதாலேயே செல்போனையே அவர்களுக்குக் கொடுக்காமல் இருந்தோம். ஆனால் இப்போது கல்வியின் அங்கமாகவே செல்போன் மாறிவிட்டது. சரியாகப் பயன்படுத்தினால் செல்போன் வாழ்வுக்கு ஒளியேற்றும். இல்லாவிட்டால் காவல் நிலையப் படியில் ஏற வைத்துவிடும். நமக்கே தெரியாமல் நம் செல்போனைத் தேடிவரும் ஆபத்துகளை இந்தக் குறும்படம் பேசும். அதேபோல் நமக்குத் தெரியாத நபரிடம் இருந்தோ, அல்லது எண்ணில் இருந்தோ வரும் எஸ்.எம்.எஸ்ஸை திறந்து பார்த்தாலோ, அல்லது அதற்குப் பதில் அனுப்பினாலோ ஏற்படும் ஆபத்துகளையும் இந்தக் குறும்படம் பேசும்” என்றார்.
மேலும், “புகைப்படக் கலைஞர் மணிகண்ட சேனாதிபதி இந்தக் குறும்படத்துக்குக் கதை, படத்தொகுப்பு, இயக்கம் ஆகியவற்றைச் செய்தார். அவர்தான் இந்த குறும்படத் தயாரிப்பின் மையமாகவும் இருந்து அனைவரையும் ஒருங்கிணைத்தார். யூசுப் ஒளிப்பதிவு செய்தார். ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நடித்த கல்லூர் மாரியப்பன் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருப்பதோடு என்னோடு சேர்ந்து திரைக்கதை, வசனமும் எழுதினார். முழுக்க நெல்லை மண்ணிலேயே படப்பிடிப்பு நடத்தினோம். நாயகியாக தமிழச்சி வினிதா நடித்தார். சுவாமிநாதன், மகாராஜா எனப் பலரும் இதற்காக உழைத்தனர்.
நெல்லை மாவட்ட காவல் துறையில் உள்ள பெண்கள் குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் துணை கண்காணிப்பாளர் மாரிராஜன், எங்கள் குறும்படத்தை வெகுவாகப் பாராட்டியதோடு, நெல்லை மாவட்ட காவல் துறையின் சமூகவலைதளப் பக்கங்களிலும் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தக் குறும்படத்தில் நடித்த அனைவருமே புதுமுகங்கள்தான். திருநெல்வேலியில் உள்ள அலங்கார் திரையரங்கில் டால்பி அட்மாஸ் ஒலியில் அரங்கம் நிறைந்த காட்சியாக இந்தக் குறும்படத்தை இன்று திரையிட்டோம். திரையரங்குகள் இதேபோல் அந்தந்தப் பகுதி இளைஞர்களை ஊக்குவித்தால் பலரும் இயக்குநர் ஆவார்கள்” என்றார் எம்.வி.ஆர்.