‘போக்சோ’வில்  பள்ளி ஆசிரியர் கைது
ஆசிரியர் முருகேசன்

‘போக்சோ’வில் பள்ளி ஆசிரியர் கைது

பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

திருச்சி அருகே பள்ளியில் மாணவிகளை பாலியல் சீண்டல் செய்ததாக, அப்பள்ளியின் ஆசிரியர் முருகேசன் என்பவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் பகுதியில் ஹாஜியார் முகமது யூசுப் மேல்நிலைப் பள்ளி 30 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், 12-ம் வகுப்பு ஆங்கிலப் பாட ஆசிரியர் முருகேசன் என்பவர், கடந்த பல நாட்களாகவே 12-ம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பள்ளி நிர்வாகம் சார்பில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவரை 10 நாட்கள் இடைநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், பணிக்கு சேர்ந்த இவர் மீண்டும் நேற்று மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் பெற்றோர்கள் மற்றும் இனாம்குளத்தூர் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த இனாம்குளத்தூர் போலீஸார் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்த தகவல் அறிந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் பள்ளிக்கு நேரில் வந்து ஆசிரியர் முருகேசன், சக ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் விசாரணை செய்தார்.

அதைத் தொடர்ந்து முருகேசனை ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடைபெற்ற விசாரணையில் ஆசிரியர் முருகேசன் மீதான புகாரின் மீது உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டது. அதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட முருகேசன், நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று இரவே திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முருகேசனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.