யாரைத்தான் நம்புவது?- அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பால் குழப்பத்தில் விவசாயிகள்

யாரைத்தான் நம்புவது?- அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பால் குழப்பத்தில் விவசாயிகள்

கைவிடப்பட்ட மோகனூர்- நெரூர் இடையேயான கதவணை திட்டத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக விவசாய முன்னேற்ற கழகத்தினர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், வழியாக காவிரி ஆறு பாய்ந்தோடுகிறது. ஆற்றுப் பாசனத்தை மையப்படுத்தி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாய பயன்பாட்டுக்காக மோகனூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்ட வேண்டுமென பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்பலனாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுக்காவுக்கு உட்பட்ட ஒருவந்தூர் - கரூர் மாவட்டம் நெரூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இச்சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கதவணைத் திட்டம் ரூ.700 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த விவசாய முன்னேற்ற கழகத்தினர்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த விவசாய முன்னேற்ற கழகத்தினர்

ஒருவந்தூர் - நெரூக்கு பதிலாக மோகனூர் - நெரூர் இடையே கதவணை கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது நாமக்கல்- கரூர் மாவட்ட விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இச்சூழலில் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி இத்திட்டம் கைவிடப்பட உள்ளதாக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மூலம் அறிவிப்பு வெளியானது. இது நாமக்கல், கரூர் மாவட்ட விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில் கதவணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கைவிடப்பட்ட மோகனூர் - நெரூர் கதவணை திட்டத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய முன்னேற்ற கழகத்தினர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். இதுகுறித்து விவசாய முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் கே.பாலசுப்ரமணியன் கூறுகையில், "மே மாதம் 1-ம் தேதி கரூர் மாவட்டம் மண்மங்கலத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 19 தடுப்பணை கட்டுவதற்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் நெரூர் அணை கட்டுவதற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மோகனூர் - நெரூர் இடையேயான கதவணை கைவிடப்படுவதாக தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இத்திட்டத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருப்பது நாமக்கல், கரூர், திருச்சி மாவட்ட மக்கள் இடையே பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சொல்வதை நம்புவதா அல்லது மின்சாரத் துறை அமைச்சர் சொல்வதை நம்புவதா என குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாமக்கல், கரூர், திருச்சி மாவட்ட மக்கள் நலனை கருத்தில் கொண்டு விளக்கம் அளிக்க வேண்டும். ஒருவேளை திட்டம் கைவிடப்படுவதாக இருந்தால்கூட அதைக் கைவிடாமல் கதவணையை தமிழக முதல்வரின் ஒப்புதல் பெற்று திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி மாவட்டம் வரை லட்சக்கணக்கான விளைநிலங்கள் நீர்பாசன வசதி பெறும். இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in