
கோவையில் உள்ள பிரபல சைவ உணவகமான ஶ்ரீ ஆனந்தாஸ் உணவகம் மற்றும் அந்தக் குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலியை மையமாகக் கொண்டு செயல்படும் ஸ்ரீ ஆனந்தாஸ் சைவ உணவகத்தின் கிளைகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன. கோவையிலும், மாநகரின் முக்கிய பகுதிகளில் இதன் கிளைகள் இருக்கின்றன.
இந்நிலையில் ஸ்ரீ ஆனந்தாஸ் உணவகம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறி இந்தச் குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கோவையில் மட்டும் எட்டு உணவகங்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும் ஆனந்தாஸ் உணவக உரிமையாளர் மணிகண்டனின் இல்லம் உள்ளிட்ட 5 வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.
நேற்றிரவு வரை சோதனை தொடர்ந்த நிலையில் வரி ஏய்ப்பு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்பட்டது. மேலும் பல ஆவணங்களைக் கைப்பற்ற வேண்டியுள்ளதால் இன்று மீண்டும் அதிகாலை முதலே அதிகாரிகள் ஆனந்தாஸ் உணவகத்திற்கு தொடர்புடைய இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.