உள்வாடகை, குத்தகை பாக்கி: அதிரடி காட்டியது தஞ்சாவூர் மாநகராட்சி

உள்வாடகை, குத்தகை பாக்கி: அதிரடி காட்டியது தஞ்சாவூர் மாநகராட்சி

தஞ்சாவூரில் உள்ள புகழ்பெற்ற பர்மா பஜாரில் குத்தகை பாக்கி செலுத்தாத 33 கடைகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.

தஞ்சாவூர் நகரப்பகுதியில் உள்ள பர்மா பஜார் கடைகள் 1984-ம் ஆண்டு வாக்கில் பர்மாவிலிருந்து வந்தவர்களின் வாழ்வாதாரத்திற்காக 20 சதுர அடி பரப்பளவில் மொத்தம் 87 கடைகள் கட்டப்பட்டு குத்தகை அடிப்படையில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. காலப்போக்கில் இக் கடைகளுக்கு பர்மா பஜார் என்று பெயர் உருவாயிற்று. இவற்றில் பர்மாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் துணிக்கடை, எலக்ட்ரானிக்ஸ் செல்போன் உள்ளிட்ட கடைகளை வைத்திருக்கின்றனர்.

தற்போது பர்மா பஜாரில் உள்ள கடைகளை குத்தகைக்கு எடுத்தவர்கள் தங்கள் கடைகளை பிறருக்கு உள்வாடகைக்கு விட்டு இருப்பதாகவும், பெரும்பாலான கடைகளில் குத்தகை பாக்கி இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. அதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக முன்னெச்சரிக்கை செய்யப்பட்டது. குத்தகை பாக்கியை செலுத்துவதற்கு கால அவகாசமும் கொடுக்கப்பட்டது.

அந்த அவகாசத்தைப் பயன்படுத்தி கொண்டு சிலர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள குத்தகையை செலுத்திவிட்டனர். செலுத்தாதவர்கள் முதலில் ஒரு லட்ச ரூபாய் கட்டி நிலுவையை புதுப்பித்துக் கொள்ளும் படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அப்படி செலுத்தாதவர்களின் கடைகள் சீல் வைக்கப்படும் என்று தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து இரண்டு நாட்களுக்கு முன்பு ஒலிபெருக்கிகள் மூலம் ஆட்டோவில் நகரை சுற்றி வந்து பர்மா பஜாரில் முன்னெச்சரிக்கை செய்தனர். அப்படியும் 33 கடைகாரர்கள் குத்தகை தொகையை கொஞ்சம் கூட செலுத்தாமல் இருந்தனர். அதனால் இன்று காலை 50க்கும் மேற்பட்ட வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறையினர் உதவியுடன் அந்த கடைகளை கண்டறிந்து சீல் வைத்தனர். இதனால் பர்மா பஜார் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

Related Stories

No stories found.