சக்குடி ஜல்லிக்கட்டில் பறிபோன உயிர்

போலீஸ் தடியடியால் பரபரப்பு
சக்குடி ஜல்லிக்கட்டில் பறிபோன உயிர்

சக்குடி கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஒருவர் உயிரிழந்தார். 20 பேர் காயமடைந்தனர்.

மதுரை மாவட்டம், சக்குடி கிராமத்தில் உள்ள முப்புலி சுவாமி கோயில் மாசி சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

முதலில் கோயில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. அதைத் தொடர்ந்து பல போட்டிகளில் பிடிபடாத மாடு என்று பாராட்டும் பரிசும் பெற்ற வீரக்காளைகள் களமிறக்கப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர்.

விதிகளை மீறி மாடுபிடி வீரர்களுக்குத் தொந்தரவாக மாட்டுடன் வந்த கும்பலை போலீஸார் புரட்டி எடுத்த காட்சி.
விதிகளை மீறி மாடுபிடி வீரர்களுக்குத் தொந்தரவாக மாட்டுடன் வந்த கும்பலை போலீஸார் புரட்டி எடுத்த காட்சி. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மாடுகள் களமிறக்கப்படும்போது உரிமையாளர்கள் சார்பில் 2 பேர் மட்டும் களத்திற்குள் வரலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மொதுமொதுவென சுமார் 20, 30 பேர் உள்ளே வந்தார்கள். ஒவ்வொரு மாட்டுடனும் இப்படி நிறைய பேர் வந்ததால், மாடுபிடி வீரர்களால் மாட்டைப்பிடிக்க முடியவில்லை. தங்களை மாடு பிடிக்க விடாமல் தொந்தரவு செய்வதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் கடுமையாக எச்சரித்தார்கள். அதன் பிறகும் கும்பல் கும்பலாக மாட்டுடன் மாடு வளர்ப்போர் தரப்பு ஆட்கள் வந்ததால், ஒரு கட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தினார்கள். அதன் பிறகு சிறிது நேரம் விதியை கடைபிடித்த மாடு வளர்ப்போர் மறுபடியும் அதே சேட்டையைச் செய்தார்கள்.

விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் 20 பேர் காயமடைந்தார்கள். அதில் ஒருவர் மாடு முட்டியதில் பரிதாபமாக இறந்தார். அவர் உசிலம்பட்டி அருகே உள்ள குளத்துப்பட்டியைச் சேர்ந்த ராஜா (42) என்பதும், மாடு உரிமையாளரான அவர் தனது மாட்டைப் பிடித்துச் சென்றபோது பின்னால் வந்த மாடி முட்டியதில் பலியானார் என்றும் பின்னர் தெரியவந்தது. போட்டியில் வெற்றிபெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் பீரோ, சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்றவை பரிசாக வழங்கப்பட்டன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in