லுக்அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைப்பு: சுப.உதயகுமார் வெளிநாடு செல்ல அனுமதி

லுக்அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைப்பு: சுப.உதயகுமார் வெளிநாடு செல்ல அனுமதி

அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் மத்திய அரசு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது.

இந்நிலையில் துருக்கியில் நடைபெறும் இதழியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாஸ்போர்ட் வழங்கவும், வெளிநாடு செல்வதற்காக லுக்அவுட் நோட்டீஸை நிறுத்தி வைக்கவும் கோரி உயர் நீதிமன்ற கிளையில் உதயகுமார் மனு தாக்கல் செய்தார். அதில், நான் நியூ ஜெர்சியில் உள்ள மன்மவுத் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தேன். தற்போது அணு உலை எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறேன். அணு உலைக்கு எதிரான போராட்டம் காரணமாக என் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒரு வழக்கில் வள்ளியூர் நீதிமன்றம் எனக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தது. அந்த விவரம் எனக்கு தெரியாது. இதனால் எனது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் துருக்கியில் மே 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள சர்வதேச இதழியல் மாநாட்டில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்துள்ளது. இதில் பங்கேற்பதற்காக எனது பாஸ்போர்ட்டை திரும்ப வழங்கவும், மத்திய பிறப்பித்த லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, உதயகுமார் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. அவர் வள்ளியூர் நீதிமன்றத்தில் இருநபர் உத்ரவாதம் அளிக்க வேண்டும். உதயகுமார் வெளிநாடு நிகழ்ச்சி முடிந்ததும் இந்தியா திரும்புவதாக உறுதிமொழி கடிதம் வழங்க வேண்டும். இந்திய தூதரகத்தில் முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும். உதயகுமாருக்கு எதிரான லுக்அவுட் நோட்டீஸ் மே 20 முதல் ஜூன் மாத இறுதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in