கொட்டாரம் பேரூராட்சியின் ரூ.68 லட்சம் டெண்டர் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

கொட்டாரம் பேரூராட்சியின் ரூ.68 லட்சம் டெண்டர் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
உயர்நீதிமன்ற மதுரை கிளை.

கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் முதல் நிலை பேரூராட்சியில் ரூ.68 லட்சம் மதிப்புள்ள டெண்டர் அறிவிப்பாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் மகாதானபுரம் தாமரைப்பூ தன்னார்வ பணியாளர் சங்க தலைவர் எஸ்.வனஜா, உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ‘கொட்டாரம் பேரூராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக குப்பைகளை சேகரிக்கும் பணியை எங்கள் சுய உதவி குழு மேற்கொண்டு வருகிறது. எங்கள் சங்கத்துக்கு வழங்கப்பட்ட உரிமம் 31.3.2023 வரை உள்ளது.

இந்நிலையில், பேரூராட்சி தலைவரின் தூண்டுதல் பேரில் கொட்டாரம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை, குப்பை சேகரிக்கும் வாகனங்களை இயக்குதல் மற்றும் தெரு விளக்கு பராமரித்தல் பணிக்காக ரூ.68 லட்சம் மதிப்பில் டெண்டர் அறிவிப்பாணையை பேரூராட்சி செயல் அலுவலர் வெளியிட்டார். இந்த அறிவிப்பாணையில் டெண்டரில் எங்கள் சங்கம் பங்கேற்கக்கூடாது என்பதற்காக பல்வேறு நிபந்தனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் வெளிப்படையான டெண்டர் சட்டம் பின்பற்றப்படவில்லை. எனவே, டெண்டர் அறிவிப்பாணையை ரத்து செய்து, குப்பை சேகரிக்கும் பணியை எங்கள் சங்கம் முன்பைபோலவே மேற்கொள்ள அனுமதிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.பி.கிருஷ்ணதாஸ் வாதிட்டார். விசாரணை நிறைவில், “வெளிப்படையாக டெண்டர் சட்டத்தின் விதிகள் மீறப்பட்டுள்ளதால் கொட்டாரம் பேரூராட்சி செயல் அலுவலர் மே 16-ல் வெளியி்ட்ட டெண்டர் அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது. சட்ட விதிகளை பின்பற்றி புதிய டெண்டர் அறிவிப்பாணை வெளியிட அனுமதி வழங்கப்படுகிறது” என நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in