பசுந்தேயிலைக் கட்டணத்தை செலுத்த அரசு சார்பில் ரூ.5 கோடி சிறப்பு மானியம்!

பசுந்தேயிலைக் கட்டணத்தை செலுத்த அரசு சார்பில் ரூ.5 கோடி சிறப்பு மானியம்!

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் ஏப்ரல் 30-ம் தேதி வரை வழங்கப்பட்ட பசுந்தேயிலைக் கட்டணத்தை செலுத்த சிறப்பு மானியமாக அரசு ரூ.5 கோடி வழங்க ஒப்புதல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொழில்துறை கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் (இண்ட்கோசர்வ்) தற்போது கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. மார்ச் மாதம் 31-ம் தேதி நிலவரப்படி 16 தொழில்துறை கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளின் இழப்பு ரூ.79.29 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 16 தொழில்துறை கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு ரூ.19.52 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு மே முதல் வாரத்தில் இண்ட்கோ தேயிலைக்கான ஏலத்தில் தேயிலை தூள் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.78.76 ஆக இருந்தது.

ஒருகிலோவுக்கு ரூ.120 என ஏலவிகிதமாக செயல்பட்டால் மட்டுமே தொழில்துறை கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இயங்க முடியும். 2021 பிப்ரவரியில் ஒரு கிலோவுக்கு ரூ.119.47-லிருந்து, மே 2022-ல் ஒரு கிலோவுக்கு ரூ.78.76 ஆக விலை சரிந்துள்ளது. தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள், மோசமான நிதி நிலையின் விளைவாக, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பசுந்தேயிலைக்கான தொகையை வழங்கவில்லை. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை விவசாயிகள், இலைச் செலவுக்கு அதிக கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் உள்ளதால், விவசாயிகள் அதிருப்தியிலும், கொந்தளிப்பிலும் உள்ளனர்.

எனவே, 2022 ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களின் இலைச்செலவை ஈடுகட்ட சிறப்பு மானியம் மூலம் 13 தொழில்துறை கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு ஆதரவை வழங்க தொழில்துறை ஆணையர் மற்றும் தொழில் மற்றும் வணிக இயக்குநர் அரசிடம் கோரினார். இதன்படி, தொழில்துறை கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளின் நிதி நிலையை பரிசீலித்த அரசு, இண்ட்கோசர்வுக்கு ரூ.5 கோடி சிறப்பு மானியமாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து அரசு செயலாளர் வி.அருண்ராய், இண்ட்கோசர்வ் முதன்மை செயல் அதிகாரிக்கு அரசாணையை அனுப்பியுள்ளார்.

இந்த மானியம் மூலம் நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகளின் பச்சை இலைச் செலவு நிலுவைத் தொகையை செலுத்த தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும். இந்த அறிவிப்பை சிறு தேயிலை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

நெலிகொலு சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகள் மேம்பாட்டு சங்க நிறுவன தலைவர் பி.எஸ்.ராமன் கூறும் போது, "நீலகிரியில் உள்ள சிறு விவசாயிகளுக்கு தேயிலை தான் வாழ்வாதாரம். மாவட்டத்தில் உள்ள இண்ட்கோ தேயிலை தொழிற்சாலைகளில் 30 ஆயிரம் விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர். கரோனா காலத்தில் கேரளாவுக்கு 1,640 மெட்ரிக் டன் தேயிலைத்தூளை இண்ட்கோசர்வ் விற்பனை செய்தது.

அதில் கிடைத்த லாபத்தை இண்ட்கோசர்வ் நிர்வாகம், தொழிற்சாலைகளுக்கு வர்ணம் பூசுதல் மற்றும் தேவையில்லாத பணிகளுக்கு செலவு செய்து விரயம் செய்தது வருகிறது.

அதிலும், பல தொழிற்சாலைகள் அங்கத்தினரிடம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்கு இது வரை தொகை வழங்கவில்லை. தற்போது அரசு சிறப்பு மானியம் அளித்துள்ள நிலையில், அங்கத்தினரினம் நிலுவை தொகையை முழுமையாக இண்ட்கோசர்வ் நிர்வாகம் வழங்க வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.