மதுரை சிறையில் ரூ.100 கோடி ஊழல்: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்

மதுரை சிறையில் ரூ.100 கோடி ஊழல்: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்

முந்தைய அதிமுக ஆட்சியில், மதுரை மத்திய சிறையில் நடந்த நூறு கோடி ஊழல் குறித்து விசாரணை நடத்தக் கோரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமை மைய இயக்குனருமான பி.புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த மருத்துவ பொருட்கள், எழுது பொருட்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பியதாக போலி கணக்கு தயாரித்து ஊழல் செய்துள்ளதாகவும், கடந்த 2016 முதல் 2021 மார்ச் மாதம் வரை நடந்த இந்த ஊழலில் 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இதற்கான ஆதாரங்கள் பெறப்பட்டதாகவும், பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்ததாகவும், சிறைக்கைதிகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் போலி கணக்கு காண்பிக்கப்பட்டதாகவும், குறைந்த அளவு பொருட்கள் உற்பத்தி செய்து, அதிக உற்பத்தி செய்தது போல் கணக்கு காண்பித்துள்ளதாகவும்,

இந்த முறைகேட்டில் அப்போதைய சிறை கண்காணிப்பாளர், டிஐஜிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும், இந்த ஊழல் தொடர்பாக உள்துறை செயலாளர், சிறைத்துறை டிஜிபிக்கு புகார் அனுப்பி எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, ஊழல் புகார் தொடர்பாக விசாரணை நடத்தும்படி குற்ற விசாரணை முறைச் சட்டப்படி, சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெற அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தது. அதேசமயம், இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு இந்த உத்தரவு தடையாக இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in