
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜேஷ் திரையரங்கின் எதிர்ப்புறம், கழிவுநீர் ஓடைக்கான பாலப்பணி நடக்கிறது. உள்ளூர்வாசிகளுக்கு அது நன்கு தெரியும். அதேபோல் பேருந்தும் மாற்றுப்பாதையில் கடந்த சிலநாட்களாகவே இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் வெளியூர்களுக்கான பேருந்துகள் இயக்கப்படும் வடசேரி பேருந்து நிலையத்தை ஒட்டி, இந்த இடம் இருப்பதால் வெளியூர்களுக்கு பேருந்தைப் பிடிக்க விரைவோருக்கு இந்த அபாயம் தெரியாமல், தொடர் விபத்துகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஜெயின் ஷாஜி காமதேனு இணையதளத்திடம் கூறும்போது, “வடசேரியில் உள்ள ராஜேஷ் திரையரங்கத்தின் அருகில், கழிவுநீர் ஓடை பாலப்பணி நடைப்பெற்று வருகிறது. இதன் காரணமாக அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டுவருகின்றன. இதனால், மணிமேடையில் இருந்து வடசேரி நோக்கி வருவதற்கு நாகராஜா கோயில் சாலை சந்திப்பில் மட்டுமே தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த பாலத்துக்கான வேலை நடைபெற்றுவரும் பகுதியில் எவ்வித தடையோ, விளக்கு வெளிச்சமோ இல்லை.
இதனால் நேற்று இரவே ஒரு வாகன ஓட்டி இந்தப் பாலத்தின் மீது நேரடியாக வந்து மோதி, தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர்தான் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மாநகராட்சி நிர்வாகம், மக்கள் மீது எவ்வித அக்கறையும் காட்டாமல் உயிரோடு விளையாடுவது கண்டிக்கத்தக்கது. மாநகராட்சி நிர்வாகம் இதில் உடனே தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.