வினாத்தாள் வெளியான விவகாரம்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ்

பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது
வினாத்தாள் வெளியான விவகாரம்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ்
மாதிரி படம்

10, 12-ம் வகுப்புகளுக்கான அரசின் திருப்புதல் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில், தொடர்புடைய பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பால் பள்ளிகள் திறப்பதில் கால தாமதமானது. இதனால் மாணவர்களின் கற்கும் திறன் குறைந்து தேர்வு குறித்த அச்சம் மாணவர்களிடையே நிலவியது. மாணவர்களின் இந்த தேர்வு அச்சத்தைப் போக்கும்வகையில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு அரசுத் தேர்வுத் துறையின் மூலம் வினாத்தாள் தயார் செய்யப்பட்டு, முதல் திருப்புதல் தேர்வு கடந்த 9-ம் தேதி முதல் 17-ந் தேதிவரை நடைபெற்று வருகின்றது.

‘அரசுத் தேர்வுத் துறையின் சார்பில் பொதுத் தேர்வைப் போல் திருப்புதல் தேர்வு நடத்தப்பட வேண்டும்’ என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்டம், போளுர் மற்றும் வந்தவாசியில் உள்ள தனியார் பள்ளிகளில் தேர்வுத் துறை இணை இயக்குநர் பொன் குமார் விசாரணை நடத்தி, அறிக்கையை பள்ளிக் கல்வித் துறை ஆணையரிடம் சமர்ப்பித்தார்.

பள்ளிக் கல்வி த்துறை ஆணையர் நந்தகுமார் தேர்வை நடத்துவதில் ஏற்பட்ட கவனக்குறைவு மற்றும் முறைகேடுகளையும் அரசிடம் அறிக்கையாக சமர்பித்தார். அந்த அறிக்கையில், வந்தவாசி மற்றும் போளூரில் உள்ள தனியார் பள்ளிகள், தங்கள் பள்ளிக்கு அனுப்பப்பட்ட வினாத்தாள்களை மாணவர்களுக்கு நகல் எடுத்து கொடுத்ததும் சில ஆசிரியர்களுக்கு அனுப்பியதும் தெரியவந்தது.

திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான மதிப்பெண்கள் வழங்கப்படும் என்ற நோக்கத்தில், இதுபோன்ற தவறில் ஈடுப்பட்டுள்ளதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களை அமைக்காமல், பள்ளிகளுக்கே வினாத்தாள்களை முன்கூட்டியே வழங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், சில தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் தேர்வு நடைபெறும்முன்பே சமூக வலைதளங்களில் வெளியானது குறித்து துறை ரீதியாக விரிவான ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆக்சிலியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வந்தவாசி ஹாசினி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் இருந்து வினாத்தாள் வெளியானது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணமான பள்ளிகளைச் சேர்ந்த நபர்களின் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியிருந்தார். மேலும்,

பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வனை அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியா, அந்த இரண்டு பள்ளிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், “அரசு தேர்வுத் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவை மீறி தேர்வு நடைபெறுவதற்கு முன்னரே வினாத்தாள்களை மாணவர்களிடம் வழங்கி உள்ளீர்கள். இது சமூக வலைதளங்களில் பரவி அரசு தேர்வுத் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இதுகுறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். தங்கள் பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது” என விளக்கம் கேட்டுள்ளார்.

மேலும், தனியார் பள்ளிகள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.