`அயோத்யா மண்டபம் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது'

தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
`அயோத்யா மண்டபம் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது'

சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ ராம் சமாஜ் என்ற அமைப்பின் மூலம் அயோத்யா மண்டபம் 1954-ம் ஆண்டு கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்தது. அந்த அமைப்பு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்த நிலையில், அயோத்யா மண்டபத்தை கடந்த 2013-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கீழ் கொண்டுவந்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து, ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பு சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் கடந்த வாரம் தனி நீதிபதி வி.எம்.வேலுமணி விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவில் ஸ்ரீ ராம் சமாஜ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீ ராம் சமாஜ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஸ்ரீ ராம் சமாஜ் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆஜராகி 2004-ம் ஆண்டு வரை நிர்வாக குழுவில் இருந்தவர்கள் விலகிய பின்னர், அதன் நிர்வாகிகள் மீது அறநிலையத் துறையிடமும், சி.எம்.டி.ஏ.விடமும் தொடர் புகார்கள் வந்ததாக குறிப்பிட்டார். அதன் அடிப்படையில், 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ம் தேதி அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவித்தார். ஸ்ரீ ராம் சமாஜ் என்பது தேர்தல் மூலம் தேர்வாகும் 15 நபர்கள் மூலம் நடத்தப்படுகிறது என்றும், எந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த நபர்களால் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

அதை எதிர்த்து போராடிய மூத்த குடிமக்கள் உள்ளிட்டோரை கைது செய்து, காவல்துறை மேற்கு மாம்பலத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது என்றும், நிர்வாகிகளும் அறங்காவலர்களும் தனித்தனியாக மேல்முறையீடு செய்துள்ளதாகவும் வாதிட்டார். திருமண மண்டபமும் புக்கிங் செய்த நிலையில் உள்ளதால் அங்கு வருபவர்களை தடுக்கக்கூடாது எனவும் கோரிக்கை வைத்தார்.

தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி அறநிலையத்துறை இணை ஆணையரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கடந்த வாரம் தனி நீதிபதி உறுதி செய்துள்ளதாகவும், நிர்வாகம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால் கைது நடவடிக்கை மேற்கொண்டு பின்னர் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் விளக்கம் அளித்தார். அயோத்தியா மண்டபம் திறக்கப்பட்டு பூஜைகள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளியை தொடவில்லை என்றும், கல்யாண மண்டபத்தை அவர்களே பயன்படுத்தலாம் என்றும் விளக்கம் அளித்தார். விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென்றும், விரைவில் இறுதி வாதங்களை முன்வைக்கவும் தயார் என்றும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களுக்கும் பிறகு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழக அரசும், அறநிலையத் துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதுவரை மேல்முறையீடு வழக்கில் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in