
தமிழக சிலை கடத்தல் பிரிவு போலீஸார் இன்று புதுச்சேரி மாநிலத்தில் மேற்கொண்ட சோதனையில் பழமை வாய்ந்த 3 உலோகச் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் பழமை வாய்ந்த உலோகச் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக சிலை கடத்தல் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனை அடுத்து இன்று காலை புதுச்சேரிக்கு வந்த தமிழக சிலை கடத்தல் பிரிவு போலீஸார் தங்களுக்கு கிடைத்திருந்த தகவலின் அடிப்படையில் சென்றாயன் தெரு பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நடராஜர், சிவன், விஷ்ணு ஆகிய மூன்று உலோகச் சிலைகளை கைப்பற்றினர். இந்த சிலைகள் தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து 1980க்கு முந்தைய ஆண்டுகளில் புதுச்சேரிக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்த சிலைகள் சுமார் 600 ஆண்டு கால பழமை வாய்ந்தது என தெரியவருகிறது. சோழர்கள் காலத்துக்கும், விஜயநகர காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவைகளாக இருக்கலாம் என்று தெரியவருகிறது.
இந்த சிலைகளை ஜோசப் கொலம்பானி என்பவர் வைத்திருந்ததாகவும், அவர் இறந்துவிட்ட நிலையில் இந்த சிலைகள் எங்கிருந்து வாங்கப்பட்டது? எப்போது வாங்கப்பட்டது என்ற தகவல்கள் தெரியவில்லை. அதனால் அவற்றை தமிழகம் எடுத்துச் சென்ற போலீஸார் அவை எந்த காலத்தைச் சேர்ந்தது? எந்த கோயிலைச் சேர்ந்தது என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மீட்கப்பட்ட சிலைகளின் மதிப்பு 12 கோடி ரூபாய்.