ராமஜெயம் கொலை நடந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு!

விசாரணையை விரைவுபடுத்த மக்கள் நீதி மய்யம் கோரிக்கை
ராமஜெயம் கொலை நடந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு!
கிஷோர்குமார்

அமைச்சர் கே. என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை விரிவுபடுத்தப்பட்டு குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அக் கட்சியின் திருச்சி, தென் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர்குமார் இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

‘தமிழகத்தையே அதிரவைத்த ஒரு குற்ற சம்பவம் நடந்து இன்றுடன் பத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனாலும் கொலையாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது வேதனையிலும் வேதனை. இவ்வாறு தமிழகம் முழுவதும் பல வழக்குகள் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ளனர் என்பது கசப்பான உண்மையும் கூட.

மறைந்த தொழிலதிபர் ராமஜெயம் மறைவிற்கு முன்பு தொழிலதிபர் துரைராஜ் உள்ளிட்ட இரட்டை கொலை வழக்கில் அவர் மீது சந்தேகம் இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. ஆனால், உண்மையில் தொழிலதிபர் துரைராஜ் மற்றும் அவரது கார் டிரைவர் ஆகியோரை காருடன் எரித்து கொலை செய்த குற்றவாளிகள் யார் என்பது மற்றுமொரு இரட்டை கொலைக்கு பிறகுதான் தெரிய வந்து கைது செய்யப்பட்டார்கள் என்பது வேதனை வரலாறு.

இவ்வாறு வாழும் பொழுதும் தான் செய்யாத குற்றத்திற்கு அவர் மீது தேவையற்ற பழிசொல்லும், மறைந்த பிறகு அவரது கொலைக்கான உண்மையான காரணம் தெரியாமல் இருக்கிறது. அதுகுறித்து அவர்கள் கற்பனைக்கு ஏற்ப காரணங்களை இட்டுக்கட்டி பரப்பப்படும் அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராமஜெயத்தை கொலை செய்த குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்பட வேண்டும்.

ராமஜெயம் கொலை நடந்து பத்தாண்டை கடந்து செல்லும் இன்றைய கசப்பான சூழலில் மேற்படி கொலை வழக்கை தீவிரமாக விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு இந்த படுபாதக செயலுக்குக் காரணமானவர்களை விரைந்து கைது செய்து தண்டனை பெற்று தரவேண்டும்.

அதுமட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் தீவிர குற்றச் செயல்கள் தொடர்பாக இதுவரை கைது செய்யப்படாமல் உள்ள பிற வழக்குகள் மீதும் தமிழக காவல்துறை டிஜிபி தனிகவனம் செலுத்த வேண்டும்.’

இவ்வாறு கிஷோர்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.