`ரயில்வே கோரிக்கைகளுக்கு புத்துயிர் கொடுங்கள்'

முதல்வருக்கு ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை
ரயில்
ரயில்hindu கோப்பு படம்

தமிழகத்திற்குத் தேவையான ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்கும் வகையிலும், புதிய ரயில்வே திட்டங்கள் குறித்து மத்திய அரசிடம் அழுத்தம் விடுக்கும் வகையிலும் தமிழக முதல்வர், தமிழக எம்பிக்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

எஸ்.ஆர்.ஸ்ரீராம்
எஸ்.ஆர்.ஸ்ரீராம்

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் காமதேனு இணையதளத்திடம் கூறுகையில், ‘கேரளம் தமிழகத்தை விட ரயில்வேதுறை வளர்ச்சியில் 25 வருடங்கள் முன்னேறி சென்றுவிட்டனர். தற்போது இன்னமும் முன்னே செல்வதற்கான நெடுங்கால திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றனர். கேரள மாநிலத்தை பொறுத்தவரை மக்கள் நலனுக்கு எதாவது தேவையென்றால் அனைத்துக் கட்சியினரும் தங்கள் பிரச்சினைகளை மறந்து ஒன்று திரண்டு மத்திய அரசிடம் வாதாடி பெற்றுக்கொள்கிறார்கள். ரயில்வே தொடர்பான மத்திய பட்ஜெட்டில் கேரள மாநிலம் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிராக கேரள முதல்வர் அங்கு உள்ள அனைத்து கட்சிகளின் எம்.பிகளையும் அழைத்து நாடாளுமன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டம் நடத்தினார்.

இவ்வாறு நடத்தப்பட்ட கூட்டத்தில் கொச்சுவேலி மற்றும் நேமம் முனைய விரிவாக்கம், அங்கமாலி – சபரிமலை ரயில்பாதை, தலசேரி – மைசூர் ரயில்பாதை, எர்ணாகுளம் மற்றும் ஷோர்னூர் இடையே உள்ள தானியங்கி சிக்னல் அமைப்பு கோரிக்கையும் தொடர்ந்து ரயில்வேயால் புறக்கணிக்கப்படுவது குறித்தும், திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்தல், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வழியாக செங்கோட்டை ரயில் என பல்வேறு ரயில்வே சம்மந்தமான கோரிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநில அமைச்சர்கள், மாநில அதிகாரிகள், தலைமை செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர். கேரளாவைவிட மக்கள்தொகையிலும் பரப்பளவிலும் மூன்று மடங்கு பெரிய மாநிலமான தமிழகத்தில் அங்கு இருக்கும் அளவுக்குக்கூட ரயில்வே துறை வளர்ச்சி அடையவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே துறைசார்ந்த கோரிக்கைகளுக்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலைதான் இன்றும் உள்ளது. பொது பட்ஜெட் என்றும் ரயில்வே பட்ஜெட் என்றும் தனித்தனியாக இருந்த இரண்டு பட்ஜெட்டுகளையும் இணைத்து 2017-ம் ஆண்டு முதல் ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பாஜக ஆட்சியில் வருடம் தோறும் புதிய ரயில்கள் அறிவிப்பு படிப்படியாக குறைந்து ரயில் பட்ஜெட் நீக்கப்பட்டதிலிருந்து கடந்த சில வருடங்களாக எந்த ஒரு புதிய ரயிலும் தமிழகத்தில் அறிவிக்கப்படவில்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்திற்கு கடந்த மத்திய பட்ஜெட்டில் 10 ரயில்வே திட்டங்களுக்கு வெறும் 10 ஆயிரம் ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டது. அதாவது ஒவ்வொரு திட்டத்துக்கும் தலா 1000 மட்டும்தான். தமிழக ரயில்வே வளர்ச்சி இவ்வாறு புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் நகர வேண்டும். இந்த நிலையில் கேரளா முதல்வர் எம்.பிகள் கூட்டம் நடத்தியதை போன்று தமிழக முதல்வரும் எம்.பிக்கள் கூட்டத்தினை விரைந்து நடத்தி தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து விவாதித்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து எம்.பிக்களின் வழியே அந்த, அந்த மாவட்ட மக்களின் ரயில்வே துறை சார்ந்த கோரிக்கைகளைப் பெறப்பட வேண்டும். முதல்வர் அதில் முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்தில் அவற்றில் எதை முக்கியத்துவம் கொடுத்து பேச வேண்டும் என எம்.பிக்களை வழிநடத்த வேண்டும். அப்படிச் செய்தால் கேரளத்தைப் போல் தமிழகத்திலும் ரயில்வே திட்டங்கள் புத்துயிர் பெறும்’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in