புலிக்கு ரேடியோ காலர் பொருத்துவதால் யாருக்கு லாபம்?

கூடலூர் வனத்தில் அலையடிக்கும் சர்ச்சை
புலிக்கு ரேடியோ காலர் பொருத்துவதால் யாருக்கு லாபம்?

‘‘டி 23 புலியை பிடித்து கூண்டில் அடைத்தால் அது மனரீதியாக பாதிக்கப்படும். எனவே பிரச்சினைக்குரிய புலிகளை ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க முடியும்!’’ என்று, தமிழக முதன்மை வன உயிரினப் பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி, ‘‘மக்களுக்கு ஊறு விளைவிக்கும் காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து, அவற்றை காட்டுக்குள்ளேயே விரட்டிவிட ரேடியோ காலர் கருவிகள் பொருத்தப்படுவது நடைமுறையில் உள்ளது. ஆனால், யானைக்கு ரேடியோ காலர் பொருத்தியதன் மூலம் பயன் ஏற்பட்டதா என்றால் 90 சதவீதம் இல்லை. அப்படியிருக்க, புலிக்கு ரேடியோ காலர் மாட்டுவதால் யாருக்கு என்ன லாபம்?’’ என்ற சர்ச்சை நீலகிரி பகுதியில் இப்போது அலையடிக்கிறது.

சேகர்குமார் நீரஜ் பேட்டியின்போது...
சேகர்குமார் நீரஜ் பேட்டியின்போது...

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் டி23 புலியை பிடிக்கும் பணி, 12 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது. இந்தப் பணிகளை பார்வையிட்ட பின்னர் தமிழக முதன்மை வன உயிரினப் பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார்.

அப்போது, ‘‘டி23 புலி மனிதர்களை சில இடங்களில் கொன்றது குறித்து அறிவியல்பூர்வமான விசாரணை நடைபெற்று வருகின்றது. தினமும் புதிய வியூகங்களை அறிவியல்பூர்வமாக செயல்படுத்தி புலியைப் பிடிக்க முயன்று வருகின்றோம். புலியின் பாதுகாப்பு, வனத் துறையினர் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. சிங்காரா வனப்பகுதியில் புலியின் தடயங்கள் இருப்பதால் அங்கு கண்காணிப்பை அதிகப்படுத்தி இருக்கின்றோம்.

டி23 புலியின் வயது காரணமாக அதற்கு வேட்டையாடுவதில் சிரமங்கள் இருக்கின்றது. சிங்காரா வனப்பகுதியில் பரண்கள் அமைத்து புலியைக் கண்காணித்து வருகிறோம். அந்தப் பகுதியில் புலிக்கோ, மனிதர்களுக்கோ எந்த இடையூறும் இல்லாதபடி பார்த்துக் கொள்ளப்படுகிறது. மன்றாடியார் வனப் பகுதியில் தெர்மல் ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த டி 23 புலியை ஆட்கொல்லி எனச் சொல்ல முடியாது . ஆட்கொல்லி புலியின் முதன்மை உணவாக மனிதர்கள் இருக்க வேண்டும். இந்தப் புலியால் ஏற்பட்ட 4 மரணங்களில், முதல் இரு மரணங்கள் இந்தப் புலியால் நடந்தது என்பதை உறுதிப்படுத்தமுடியவில்லை. இந்தப் புலியைப் பிடித்து கூண்டில் அடைத்தால் அது மனரீதியாக பாதிக்கப்படும். என்றாலும் அதை சரி செய்து விட முடியும். வருங்காலங்களில் இப்படி பிரச்சினைக்குரிய புலிகளை ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்கலாம். ரேடியோ காலர்களின் எடையும் 5 கிலோ வரை இருக்கும் என்பதால் அதற்கு பிரச்சினை இருக்காது” என்றார்.

புலிக்கு கூண்டு
புலிக்கு கூண்டு

இந்தப் புலியைப் பொறுத்தவரை 4 பேரை அடித்துள்ளது. 10-க்கும் மேற்பட்ட கால்நடைகளை கொன்றுள்ளது. புலி அடித்து இறந்தவர்களில் முதல் மூன்றுபேரின் உடலைச் சுவைக்காத புலி, கடைசியாக இறந்தவரின் உடலின் ஒரு பகுதியை மட்டும் புசித்துள்ளது. மனித ரத்தம் உப்புக்கரிக்கும் தன்மை கொண்டது. அதை ஒருமுறை சாப்பிட்டுப் பழகின புலி, மறுபடி மனித இறைச்சியை சுவைக்கவே விரும்பும். எனவேதான் அவை ஆட்கொல்லி லிஸ்ட்டில் சேருகின்றன. எனவேதான், அதை சுட்டுப்பிடிப்பதைத் தவிர வேறு வழியில்லை என கோரிக்கை வைக்கிறார்கள் மசினகுடி, கூடலூர் பகுதியைச் சேர்ந்த மக்கள்.

இவர்கள் கோரிக்கை வைத்தபோதே களத்தில் இறங்கிய வனத் துறை, அப்போதே புலியைச் சுட்டுப்பிடித்திருந்தால் பிரச்சினையில்லை. ஆனால் ‘சுட்டுப்பிடிப்பதா... மயக்க ஊசி செலுத்திப் பிடிப்பதா’ என்ற விவாதத்துக்கு பதில் தேடுவதற்குள் விவகாரம் நீதிமன்றம் வரைக்கும் சென்று, ‘நாங்கள் சுட்டுப்பிடிக்க உத்தரவு போடவில்லை. உயிருடன் பிடிக்கவே முயற்சி செய்கிறோம்’ என்று வனத் துறை உயர் அதிகாரிகள் மறுக்குமளவுக்குப் போய்விட்டது.

புலி அடித்த கால்நடையுடன் வனத் துறை அலுவலகம் முன் முற்றுகை
புலி அடித்த கால்நடையுடன் வனத் துறை அலுவலகம் முன் முற்றுகை

இதுபற்றி நம்மிடம் பேசிய நீலகிரி இயற்கை ஆர்வலர்கள் சிலர், “புலியைச் சுட்டுப்பிடிக்க வேண்டும் என்று சிலரும், சிலர் மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்க வேண்டும் எனவும் சிலரோ, இல்லை மயக்க ஊசி போட்டுப் பிடிப்பதால் புலி சித்ரவதைக்கு உள்ளாகும், கூண்டு வைத்தோ, வலை விரித்தோ பிடிக்க வேண்டும் என்றும் ஆளாளுக்குப் பேசுகிறார்கள். இதில் யார் சொல்வதைக் கேட்பது என்று புரியாமல் வனத் துறை தவிக்கிறது.

தற்போது ரேடியோ காலர் விஷயத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். வனத் துறை அதிகாரி, ரேடியோ காலரை இந்தப் புலிக்கு பொருத்தி கண்காணிக்கப் போகிறோம் என்று சொல்ல வேண்டியதுதானே? அது ஏன் வருங்காலங்களில்... என்று குறிப்பிடுகிறார்? அதிலேயே அரசியல் உள்ளது. ஏற்கெனவே கோவையிலிருந்து பிடித்து வரப்பட்ட விநாயகன் என்ற யானை, ரேடியோ காலர் பொருத்தப்பட்டு காட்டில் விடப்பட்டது. எண்ணி சில நாட்களில் அந்த யானை எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. சிக்னல் கிடைக்கவில்லை. அதன் மூலம் அதன் ரேடியோ காலர் எங்கேயோ கழன்று விழுந்து விட்டது என்று தெரிய வந்தது.

அதேபோல், சமீபத்தில் முதுமலைப் பகுதியில் சுற்றித்திரிந்த ரிவோல்டா யானைக்கும் ரேடியோ காலர் பொருத்தி காட்டில் விட்டார்கள். அதுவும் நான்கைந்து நாட்கள்தான். அதன் சிக்னலும் கிடைக்கவில்லை. ரிவோல்டாவும் பழைய இடத்திற்கே திரும்பி வந்து மக்களோடு மக்களாக சுற்றித்திரிகிறது. காட்டு யானைகளுக்கு ரேடியோ காலர் பொருத்தப்படுவதே அது காடுகளில் சுற்றித்திரிவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும், அது குடியிருப்புகள் நோக்கி வருவதை முன்கூட்டியே அறிந்து அவற்றை மீண்டும் காட்டுக்குள் விரட்டி விடத்தான். ஆனால் அது நடக்கவில்லை என்றால், அந்தத் திட்டமே தோல்வி அடைந்தது என்றுதானே அர்த்தம்?

அப்படிப்பட்ட ரேடியோ காலர் திட்டத்தை, புலிக்கு கொண்டு வந்தால் என்ன நடக்கும்? டி23 புலிக்கு 10 வயது என்கிறார்கள். அது திரும்ப தனது வாழிடத்தைப் போட்டிப் புலியிடமிருந்து சண்டையிட்டு மீட்க முடியாது. அது காடுகளுக்குள் அதிகபட்சம் வாழ்ந்தால் இன்னும் 2 வருடங்கள் வாழலாம். அதுவே, கூண்டு வைத்து பிடித்துவந்து வண்டலூர் ஸூவில் விட்டால் கூடுதலாக கொஞ்ச நாட்கள் உயிருடன் இருக்க வாய்ப்பிருக்கிறது.

கர்நாடகாவில் இப்படி காட்டில் வாழமுடியாத வயோதிக புலிகளைக் காப்பதற்கென்றே, மனிதர்களுக்கான முதியோர் காப்பகங்கள் போல 2 புலிகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகிறது. அங்கே இந்தப்புலியை கொடுக்கலாம். அல்லது நம் மாநிலத்திலேயே இப்படி வயோதிகப் புலிகளுக்கான காப்பகத்தை ஏற்படுத்தலாம். வரும் காலங்களில் இப்படியான புலிகள் அகப்பட்டால் அதைப் பாதுகாக்கவும் அதுதான் வசதிப்படும். அதை விட்டுவிட்டு, ரேடியோ காலர் திட்டத்தை சொல்லுவது ஏன்? ஏனென்றால், இந்த ரேடியோ காலர் பொருத்தும் பணியில் ஒரு சில தன்னார்வ அமைப்புகள் செயல்படுகின்றன. அவற்றுக்கு அந்நிய நாட்டு நிதியுதவியும் வருகிறது. ஏற்கெனவே ரேடியோ காலர் பொருத்தப்பட்ட யானைகளுக்கு தலா ரூ. 6 லட்சத்திற்கு மேல் செலவழித்திருக்கிறார்கள். இப்போதும் அதேபோல் செலவழித்து கணக்கெழுதும் திட்டம்தான் இதில் உள்ளது. அதற்கு இனியும் இடம் கொடுக்கலாகாது’’ என்றனர்.

கண்காணிப்பு பணியில்
கண்காணிப்பு பணியில்

“இந்த ரேடியோ காலர் என்றில்லை. புலிக்காக பரிந்து பேசுபவர்களில் சிலருக்கு வேறு சில உள்நோக்கமும் உள்ளது. அவர்கள் யாருக்கும் புலி மீது உண்மையான அக்கறை கிடையாது. ரேடியோ காலர், கூண்டு பிசினஸ், வனத் துறை ஒப்பந்தங்களில் வரும் வருமானம் போன்றவை தான் அவர்களின் குறியாக உள்ளது. அதையெல்லாம் கவனித்தே இந்த மாதிரியான விஷயங்களில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் சொல்கிறார்கள் நம்மிடம் பேசிய தன்னார்வலர்கள் சிலர்.

எல்லாம் சரி. தற்போது அந்த டி23 புலி எங்கே இருக்கிறது?

‘‘4 நாட்களுக்கு முன்பு சிங்காரா வனப்பகுதியில் காலடித் தடங்களைப் பார்த்ததாகச் சொல்கிறார்கள். மற்றபடி அது எங்கே போனது என்றே தெரியவில்லை. எங்கள் கண்களிலிருந்து மாயமாய் மறைந்து, எங்கோ அடர் வனத்துக்குள் பதுங்கி விட்டது. இருந்தாலும் மரங்களில் அமர்ந்து, அதன் நடமாட்டம் தெரிகிறதா என கண்காணித்து வருகிறோம்” என்கின்றனர், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள வன ஊழியர்கள்.

Related Stories

No stories found.