`946 பெயர்களில் ஒருவர்கூட தமிழர்கள் இல்லை'- அஞ்சல் அலுவலகம் முன்பு நடந்த கொந்தளிப்பு போராட்டம்

விருத்தாசலம் அஞ்சல் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டம்
விருத்தாசலம் அஞ்சல் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டம்

தமிழ்நாட்டு அஞ்சலகங்களில் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்படுவதைக் கண்டித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைத் தலைவர் க. முருகன் தலைமையில் இன்று அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறைத் தலைவர் அலுவலகம் கடந்த மார்ச் 30-ம் தேதியன்று வெளியிட்டுள்ள புதிய ஊழியர் சேர்ப்புப் பட்டியலில் 946 பெயர்கள் உள்ளன. இவர்கள் தமிழ்நாட்டில் எந்தெந்தக் கோட்டத்தில் எந்தெந்த அலுவலகத்தில் பணியில் சேர வேண்டும் என்ற விவரங்கள் உள்ளன. இந்த 946 பெயர்களில் ஒரு பெயர்கூடத் தமிழ்நாட்டுப் பெயராக இல்லை என்று கூறும் தமிழர் நல அமைப்புக்கள், அவையெல்லாம் வடநாட்டுப் பெயர்களாகவே இருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.

விருத்தாசலத்தில் தொழில், வணிகம் ஆகியவற்றில் வெளி மாநிலத்தவர்களின் ஆதிக்கம் மேலோங்கி வரும் நிலையில் தற்போது அஞ்சல் துறை வேலைகளிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் மட்டும் சற்றேறக்குறைய 53 வடமாநிலத்தவர்களை பணியில் அமர்த்தி உள்ளனர்.

தமிழ்நாட்டில் தமிழர்களை இப்படி முற்றிலுமாக புறக்கணித்து, வட நாட்டுக்காரர்களை பணியில் சேர்ப்பதைக் கண்டித்து இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

தொழில், வணிகம், வேலை வாய்ப்பு போன்ற பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளில் அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தவர்க்கு முன்னுரிமையும் முழு வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அந்த நோக்கத்திற்கு முற்றிலும் எதிராகத் தமிழ்நாட்டில் இந்திய அரசுத் துறைகளில் தமிழர்களைப் புறக்கணித்து, வடநாட்டு - இந்தி மாணவர்களை முறையற்ற வழிகளில் இந்திய அரசு திணிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று இந்த முற்றுகைப் போராட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in