உயிருடன் வெட்டப்படும் பிராய்லர் கோழி... ஃபேஸ்புக்கில் நேரலை... `லைக்' ஆசையில் சிக்கிய சிக்கன் கடைக்காரர்

உயிருடன் வெட்டப்படும் பிராய்லர் கோழி... ஃபேஸ்புக்கில் நேரலை... `லைக்' ஆசையில் சிக்கிய சிக்கன் கடைக்காரர்

கறிக்கோழிக் கடையில் வாடிக்கையாளருக்கு கொடுக்க கோழியைக் கொன்றவருக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. ஆயிரக்கணக்கில் பிராய்லர் கோழிகளை, இறைச்சிக் கடையில் கொல்வது வழக்கமான ஒன்றுதான். பின்பு ஏன்? இந்த கறிவெட்டுபவரை மட்டும் கைது செய்யக் கோரிக்கை என்பதன் பின்னணி கொடூரமானது!

தமிழகக் கேரள எல்லையோரப் பகுதியில் இருக்கிறது தமிழகத்தின் கொல்லங்கோடு. இங்குள்ள இறைச்சிக்கடை ஒன்றில் செங்கவிளையைச் சேர்ந்த மனு என்பவர் இறைச்சி வெட்டும் வேலை செய்துவருகிறார். வழக்கமாக கோழிக்கடைகளில் வாடிக்கையாளர்கள் கோழிக்கறி வாங்கும்போது, கோழியின் கழுத்து முதலில் அறுக்கப்பட்டு அவை உயிர் இழந்தபின்பு தான் இறைச்சிக்காக வெட்டப்படும். பிராய்லர் கோழிகள் இறைச்சிப் பயன்பாட்டிற்கே வியாபார நோக்கத்தில் வளர்க்கப்படுகிறது.

நாட்டுக்கோழி, சேவல், ஆடு, மாடு ஆகியவை இறைச்சி பயன்பாட்டிற்கு தினந்தோறும் வெட்டப்பட்டே வருகிறது. ஆனால் மனு என்பவர் இறைச்சிக்கடையில் தன் முகநூலில் லைக்ஸ் வாங்கும் நோக்கத்தோடு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கோழியின் கழுத்தை அறுத்துக் கொல்லாமல், பிராய்லர் கோழி உயிருடன் இருக்கும்போதே முதலில் அதன் இறகுகளைப் பிரிக்கிறார். தொடர்ந்து அது உயிருடன் இருக்கும்போதே சிறு, சிறு துண்டுகளாக கோழியை கறிக்கு ஏற்றார் போல் வெட்டுகிறார். இதில் துள்ளத், துடிக்க கோழி பரிதாபமாக உயிரிழந்தது. இதை அவர் தன் கடை விளம்பரத்திற்காகவும், முகநூல் நண்பர்களை ஈர்க்கும்விதமாகவும் தன் ஃபேஸ்புக்கில் நேரலையாக வெளியிட்டார்.

துள்ளத், துடிக்கக் கோழியை அவர் சித்ரவதை செய்து கொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. இதைப் பார்த்த உயிரின ஆர்வலர்கள் மனுவைக் கைது செய்ய வேண்டும் என குரல் எழுப்பிவருகின்றனர். கடை விளம்பரத்திற்காக செய்தது, நெட்டிசன்கள் மத்தியில் இவ்வளவு எதிர்ப்பை உருவாக்கும் என நினைத்துப் பார்க்கவில்லை என புலம்பி வருகிறார் மனு.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in