பட்டினப் பிரதேசத்துக்கு எதிர்ப்பு: பறையடித்துப் போராடியவர்கள் கைது!

பட்டினப்பிரவேசத்துக்கு  எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
பட்டினப்பிரவேசத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

இன்று இரவு நடைபெறவுள்ள தருமபுர ஆதீனத்தின் பட்டனப்பிரவேச நிகழ்வுக்குத் தடை விதிக்கக்கோரி மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி ஏந்தி பறையடித்து போராட்டம் நடத்தினர். அவர்களைப் போலீஸார் கைதுசெய்தனர்.

மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனத்தில் குரு முதல்வரின் குருபூஜை விழாவின்போது ஆதீனகர்த்தர் சிவிகை பல்லக்கில் அமர்ந்து பட்டினப்பிரவேசம் செல்லும் நிகழ்வு பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட அந்த நிகழ்வு இன்று இரவு நடைபெறவுள்ளது.

ஆதீனகர்த்தரைப் பல்லக்கில் அமரவைத்து மனிதர்கள் சுமந்து செல்வதற்குத் தடை விதிக்கக் கோரி திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதனால் தமிழக அரசின் சார்பில் இந்நிகழ்வுக்கு முதலில் தடை விதிக்கப்பட்டு பின்னர் பல தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று தடை நீக்கப்பட்டது.

இதனையடுத்து பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு 600-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சியைத் தடை செய்ய கோரி மக்கள் அதிகாரம், விடுதலைச் சிறுத்தைகள், விவசாயிகள் விடுதலை முன்னணி, தமிழர் உரிமை இயக்கம் உள்ளிட்ட அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் காளியப்பன் தலைமையில் மயிலாடுதுறை விஜயா திரையரங்கம் அருகே போராட்டக்காரர்கள் கருப்புக்கொடி ஏந்தியும் பறையடித்தும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ‘மனிதனை மனிதன் சுமப்பது மத உரிமை அல்ல, மனித உரிமை மீறல்’, ‘தருமபுர ஆதீனத்தில் பல்லக்கு விழாவைத் தடைசெய்ய வேண்டும். ஆதீன மடத்தின் சொத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதில் மக்கள் அதிகாரம் மாநில பொதுச் செயலாளர் ராஜீவ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல பொறுப்பாளர் வேலு குபேந்திரன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன், விவசாயிகள் விடுதலை முன்னணி ஒருங்கிணைப்பாளர் ரவி, தமிழர் உரிமை இயக்கம் சுப்பு மகேஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 90-க்கும் மேற்பட்டவர்களைப் போலீஸார் கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in