முதல்வர் ஸ்டாலின் மருமகன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை

பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் உத்தரவு
முதல்வர் ஸ்டாலின் மருமகன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை

முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மருமகன் சபரீசன் உள்ளிட்டோர் மீது மான நஷ்டஈடு கோரி முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவங்களில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு தொடர்பிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். அந்த பேச்சு கலைஞர் தொலைக்காட்சியிலும், நக்கீரன் மற்றும் ஜூனியர் விகடன் இதழ்களிலும் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.

பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்ந்து தன்னை தொடர்படுத்தி உண்மைக்கு புறம்பான தகவலை ஸ்டாலின் பேசுவதற்கு தடை விதிக்க கோரியும், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரியும் பொள்ளாச்சி ஜெயராமன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின், கலைஞர் தொலைகாட்சி மற்றும் அதன் நிர்வாகி என்ற முறையில் அவரது மருமகன் வி.சபரீசன், நக்கீரன் ஆசிரியர் கோபால், ஜூனியர் விகடன் ஆசிரியர் அறிவழகன் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு இருந்தனர். இந்த வழக்கிலிருந்து தனது பெயரை நீக்கக் கோரி சபரீசன் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அவரது மனுவை தள்ளுபடி செய்து கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சபரீசன் தொடர்ந்த மேல்முறையீடு மனு, நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சபரீசன் தரப்பில், கலைஞர் தொலைகாட்சிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்பதால், இந்த வழக்கிற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை. வழக்கிலிருந்து தனது பெயரை நீக்க வேண்டுமெனவும், அதுவரை தனி நீதிபதி முன்பான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதிகள், மான நஷ்டஈடு வழக்கை தனி நீதிபதி விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து, வழக்கு விசாரணையை ஜூன் 10-ம் தேதி தள்ளிவைத்துள்ளனர்.

Related Stories

No stories found.