மதுவிலக்கு காவல் நிலையத்துக்குப் பூட்டு: ஏன்?

மதுவிலக்கு காவல் நிலையத்துக்குப் பூட்டு: ஏன்?
பூட்டப்பட்ட சீர்காழி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம்

கள்ள மது விற்பனைக்கு துணை போனதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சீர்காழி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினரும் துணைபோவதாக பொதுமக்கள் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இதில் சம்பந்தப்பட்ட சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளர் கவிதாவை அண்மையில், தஞ்சை சரக டிஐஜி-யான கயல்விழி அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார்.

இதனைத் தொடர்ந்து தஞ்சை டிஐஜி சரகத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனையில் யாரேனும் ஈடுபட்டாலோ அல்லது அதற்கு போலீஸார் உடந்தை என்று தகவல் வந்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஐஜி-யான கயல்விழி அப்போது எச்சரிக்கை விடுத்திருந்தார்.

சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் ஒரு ஆய்வாளர் தலைமையில், ஒரு உதவி ஆய்வாளர், ஒன்பது பெண் போலீஸார் உட்பட மொத்தம் 16 பேர் பணியில் இருந்தனர். கள்ளச் சாராய விற்பனை தொடர்பான புகாரில் ஆய்வாளர் கவிதா சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவருடன் பணிபுரிந்த மற்ற போலீஸார் மீதும் தொடர்ந்து சில குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வந்தன.

இதனையடுத்து, அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் உட்பட 15 பேரையும் கூண்டோடு பணியிடமாற்றம் செய்து டிஐஜி-யான கயல்விழி உத்தரவிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். டிஐஜி-யின் இந்த அதிரடி நடவடிக்கையால் சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையம் யாரும் பணியில் இல்லாததால் பூட்டுப் போட்டு பூட்டப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.