புதுச்சேரி தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது : ஆணையத்திற்கு கறார் உத்தரவு

புதுச்சேரி தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது : ஆணையத்திற்கு கறார் உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை 6 வாரங்களுக்கு வெளியிடக் கூடாது என புதுச்சேரி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கி 2019-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை திரும்பப் பெற்றதை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவரும், திமுக அமைப்புச் செயலாளருமான சிவா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, இட ஒதுக்கீடு தொடர்பான இந்த வழக்கை திரும்பப் பெற்ற மனுதாரர், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் வரை தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்த உத்தரவை நீட்டித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, உயர் நீதிமன்றத்தையே நாட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த மார்ச் மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது உள்ளாட்சி தேர்தலை அறிவிக்க புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் முயற்சிப்பதாக கூறி, தேர்தலை அறிவிக்க தடை கோரியும், இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற்ற உத்தரவுகளை ரத்து செய்யக் கோரியும் திமுக எம்எல்ஏ சிவா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆனந்தி அடங்கிய அமர்வு, தேர்தல் தொடர்பான அறிவிப்பை 6 வாரங்களுக்கு வெளியிடக் கூடாது என்ற தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.