`சாத்தான்குளம் வழக்கைப் போல் விக்னேஷ் மரணத்துக்கு காரணமான போலீஸாரையும் கைதுசெய்ய வேண்டும்'

காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் வலியுறுத்தல்
`சாத்தான்குளம் வழக்கைப் போல் விக்னேஷ் மரணத்துக்கு காரணமான போலீஸாரையும் கைதுசெய்ய வேண்டும்'

சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விக்னேஷ் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து சம்பந்தப்பட்ட காவலர்களை கைது செய்ய வேண்டும் என்று காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை கெல்லிஸ் சந்திப்பில் கடந்த 18-ம் தேதி இரவு ஆட்டோவில் வந்த சென்னை பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை போலீஸார் மடக்கி பிடித்து விசாரித்து பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். காவல் நிலையத்தில் இருந்த விக்னேஷ் (25) கடந்த 19-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் தொடர்புடைய மூன்று காவலர்கள் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விக்னேஷின் குடும்பத்தினர் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், கலந்து கொண்டு நடந்த சம்பவம் குறித்து விளக்கினர். அப்போது, விக்னேஷின் மூத்த சகோதரர் வினோத் கூறுகையில், தனது தம்பியின் மரணத்தை மறைக்க ஆயிரம் விளக்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன்தாஸ், பட்டினப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் தன்னையும், தனது தம்பிகளையும் காரில் அழைத்துச் சென்று பணம் கொடுத்து பேரம் பேசியதாகவும், மெரினாவில் கடை வாங்கித் தருவதாகவும் கூறியதாக தெரிவித்த அவர், காவல் துறையினர் கொடுத்த பணத்தை செய்தியாளர்கள் முன் காண்பித்தார்.

விக்னேஷின் மற்றொரு சகோதரரான சத்யா கூறுகையில், இறுதிவரை தனது அண்ணனின் முகத்தை சரியாக கூட பார்க்கவிடாமல், போலீஸாரே இறுதிச் சடங்கை செய்து முடித்து விட்டதாக கண்ணீர் மல்க கூறினார்.

போலீஸார் தாக்குவதை நேரில் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் பிரபு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆட்டோவில் நான் விக்னேஷ், சுரேஷ், மூன்று பேரும் வந்த போது கெல்லீஸ் சந்திப்பில் போலீஸார் ஆட்டோவை மடக்கி விசாரித்தனர். பின்னர் அங்கு வைத்தே விக்னேஷ், சுரேஷ், இருவரையும் போலீஸார் உருட்டுக்கட்டையால் அடித்து துன்புறுத்தியதாகவும் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை எடுத்துப் பார்த்தாலே உண்மை தெரியவரும் என்றும் கூறினார்.

பின்னர் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் பேசிய மனித உரிமை ஆர்வலர் ஹென்ரி திபேன், இந்த விவகாரத்தில் விசாரணைக் கைதி மரணம் அடைந்தால் பிரேத பரிசோதனையின் போது பின்பற்ற வேண்டியது தொடர்பாக உயர் நீதிமன்றம் வகுத்த விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை எனவும், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்படுவதோடு ஆய்வாளர் மோகன் தாஸ், ராஜேஸ்வரி ஆகியோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சம்பவம் நடந்த இடம் மற்றும் காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளை வெளியிட டி.ஜி.பி தயாரா? என கேள்வி எழுப்பிய அவர், சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தின்படி விக்னேஷ் குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பை முதன்மை நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உயிரிழந்த விக்னேஷின் சாதி சான்றிதழை பத்திரிகையாளர் சந்திப்பின் போது காட்டி இனியாவது சிபிசிஐடி போலீஸார் எஸ்.சி/எஸ்.டி பிரிவில் வழக்கு பதிவு செய்வார்களா? என்பதை பார்ப்போம் என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in