வீடு வீடாக செல்போன் விநியோகம்... போலீஸிடம் சிக்கிய அதிமுக பிரமுகர்

வீடு வீடாக செல்போன் விநியோகம்... போலீஸிடம் சிக்கிய அதிமுக பிரமுகர்
பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள்

கரூர் மாநகராட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு வாக்களிக்க அன்பளிப்பாக செல்போன்களை கொடுத்தவர் போலீஸாரிடம் வகையாக சிக்கினார்.

கரூர் மாநகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சியின் பல்வேறு இடங்களிலும் கடந்த இரண்டு மூன்று தினங்களாகவே அரசியல் கட்சிகளின் சார்பில் வாக்காளர்களுக்கு விதவிதமான அன்பளிப்புகள் வழங்கப்பட்டு வந்தன.

இன்று வாக்குப்பதிவு நாளிலும் அன்பளிப்பு வழங்குவது தொடர்கின்றன. இன்று காலை 7 மணியளவில் கரூர் 38-வது வார்டு அம்மன்நகர் பகுதியில் ஒருசிலர் வாக்களிக்க அன்பளிப்பாக வாக்காளர்களுக்கு செல்போன் வழங்குவதாக தாந்தோணிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உடனடியாக அப்பகுதிக்குச் சென்ற போலீஸார், வாக்காளர்களுக்கு செல்போன்களை விநியோகம் செய்துகொண்டிருந்த சங்கர் (21) என்பவரைப் பிடித்து, அவரிடமிருந்த 11 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின்போது அவர் அளித்த தகவலின்பேரில் அதே பகுதியில் இருந்த ஈஸ்வரி என்பவரின் வீட்டில் சோதனை நடத்தி, அவர் வீட்டிலிருந்த 27 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

செல்போன்களுடன் சங்கர்
செல்போன்களுடன் சங்கர்

அந்த வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரவணன் சார்பில் அந்த செல்போன்கள் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது என்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் கு.தேவராஜ், பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் ஞா.செந்தில்குமார் ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.