`முதலில் கழிவறையைத் திறங்க, அப்புறம் சுகாதார மையத்தை திறக்கலாம்'- மேயரின் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

`முதலில் கழிவறையைத் திறங்க, அப்புறம் சுகாதார மையத்தை திறக்கலாம்'- மேயரின் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

திருப்பரங்குன்றம் துர்கா காலனி பகுதியில் கழிவறை வசதி செய்து தராமல், சுகாதார மையம் அமைக்க கூடாது எனக் கூறி பொதுமக்கள், மதுரை மேயர் காரை முற்றுகையிட்டனர்.

தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார மையம் அமைப்பதற்கான பூமி பூஜை துர்கா காலனி பகுதியில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மண்டலத் தலைவர் சுவிதா விமல் தலைமை வகித்தார், மாநகராட்சி கவுன்சிலர் சிவசக்தி ரமேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், "ஏற்கெனவே இப்பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட கழிப்பறை பல ஆண்டுகளாக பூட்டி கிடப்பதாகவும், அதனை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் குடிநீர், சாலை வசதி சரிவர இல்லை.

இதுகுறித்து, பலமுறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை" எனக் கூறி மாநகராட்சி மேயரின் கார் முன்பு நின்று முற்றுகையிட்டனர். இதையடுத்து, அங்கிருந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் சமாதானம் பேசி அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in