என்எல்சி அறிவித்திருக்கும் இழப்பீட்டை ஏற்க முடியாது!

26 கிராமங்களிலிருந்து எழும் எதிர்ப்புக் குரல்
சுரங்கம்
சுரங்கம்

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் இருக்கும் என்எல்சி இந்தியா நிறுவனம், தனது 3-வது சுரங்கத்தை அமைக்கும் பணியில் இறங்கியிருக்கிறது. இதற்காக, நெய்வேலிக்கு அருகில் உள்ள மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கத்தாழை, மும்முடிச்சோழகன் உள்ளிட்ட 26 கிராமங்களில் சுமார் 12,500 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தத் தொடங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகள் முன்னரே கொடுக்கப்பட்டுவிட்ட நிலையில், கையகப்படுத்தப்படும் நிலம், வீடு உள்ளிட்டவற்றுக்கான இழப்பீட்டுத் தொகை குறித்து சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட மக்களிடம் கருத்துகளைக் கேட்காமல் என்எல்சி நிறுவனம் தானாகவே முடிவுசெய்து இழப்பீட்டுத் தொகையை அறிவித்துள்ளது என்றும், மிகக் குறைவான அந்தத் தொகையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அப்பகுதி மக்கள் போர்க்குரல் எழுப்பியுள்ளனர்.

கேள்வி எழுப்பிய மக்கள்

ஜனவரி 17-ல் நெய்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி காணொலி மூலம் புதிய மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுத் திட்டத்தை வெளியிட்டார். அக்கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வெ.கணேசன் மற்றும் அப்பகுதிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி இழப்பீட்டுத் தொகை குறித்தும் அறிவித்தார்.

ஆனால், இழப்பீடு குறித்து மக்கள் எழுப்பிய கேள்விகளால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. பதில் சொல்ல முடியாமல், என்எல்சி அதிகாரிகள் திணறிப்போன நிலையில் அமைச்சர்களும் அங்கிருந்து வெளியேறினர்.

என்னென்ன அறிவிப்புகள்?

மத்திய அமைச்சரின் அறிவிப்பின்படி, நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காகக் கையகப்படுத்தப்படும் விளைநிலங்களுக்கு ஏக்கருக்கு 23 லட்சம் ரூபாயும், ஊரகப் பகுதிகளில் உள்ள வீட்டு மனைகளுக்கு சென்ட்டுக்கு 40 ஆயிரம் ரூபாயும், நகரப்பகுதிகளில் சென்ட்டுக்கு 75 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறுகுடியமர்வுக்காக 2,178 சதுர அடி மனை வழங்கப்பட்டு, அதில் 1,000 சதுர அடியில் வீடு கட்டித் தரப்படும். ‘நிலம் வழங்குவோருக்கு நிரந்தர வேலை வழங்க முடியாது. ஒப்பந்த வேலைவாய்ப்பு வழங்கப்படும் அல்லது அதற்கான இழப்பீடாக 10 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்’ என்றும் என்எல்சி இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் இதுகுறித்து எவ்விதமான கருத்துகளும் கேட்கப்படவில்லை எனக் குரல்கள் எழுந்திருக்கின்றன. அதேபோல நிலம் எடுப்பு என அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் நில உரிமையாளர்களிடம் முறையாகக் கருத்துகளைக் கேட்கவில்லையாம். எனவே, புதிய மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுத் திட்டத்துக்கு, சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வளையமாதேவி கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், ’’நாங்கள் என்எல்சிக்கு நிலம் கொடுக்க முடியாது என்று எப்போதும் சொல்லவில்லை. ஆனால் அதற்குரிய இழப்பீட்டைக் கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். தேசிய நெடுஞ்சாலை பணிக்காக அருகில் உள்ள ஊர்களில் எடுக்கப்படும் நிலத்துக்கு ஏக்கர் ஒன்றுக்கு 45 லட்சம் ரூபாய் தருகிறார்கள். என்எல்சி தரப்பிலோ வெறும் 23 லட்சம் தருவதாகச் சொல்கிறார்கள். அதேபோல வீடுகளுக்கும், மனைகளுக்கும் உரிய நியாயமான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று கேட்கிறோம்.

செல்வராஜ்
செல்வராஜ்

அத்துடன் வாழ்வாதாரத்தை இழக்கும் எங்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை கொடுங்கள் என்று நியாயமான கோரிக்கையை முன்வைக்கிறோம். அதையும் ஏற்க முடியாது என்கிறார்கள். அப்படியென்றால், அவர்கள் தரும் குறைவான இழப்பீட்டையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. வீட்டுமனைக்கும், நிலத்துக்கும் உரிய மதிப்பிலான இழப்பீடும், வீட்டுக்கு ஒருவருக்கு வேலையும் வழங்க வேண்டும். இல்லையென்றால், அனைத்து ஊர் மக்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்தத் தீர்மானித்திருக்கிறோம்” என்கிறார்.

இதுகுறித்து இன்னும் விரிவாகப் பேசினார் அதிமுக மாவட்டச் செயலாளரும், புவனகிரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான அருண்மொழிதேவன்.

‘’என்எல்சி 3-வது சுரங்கத்துக்காகக் கையகப்படுத்தப்படவுள்ள ஊர்கள் பெரும்பாலும் எனது சட்டப்பேரவைத் தொகுதிக்குள்தான் வருகின்றன. காலம்காலமாக அங்கு வசித்துவந்த மக்கள் தங்கள் வாழ்விடத்தைவிட்டு அகல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கான தேவைகளை என்எல்சி நிறுவனம் பூர்த்தி செய்துதர வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் அடிமாட்டு விலைக்கு அவர்களின் இடங்களை அபகரிக்கப் பார்க்கிறார்கள்.

அருண்மொழிதேவன்
அருண்மொழிதேவன்

நிலங்களில் நிலக்கரி வெட்டி எடுப்பதால், என்எல்சி இந்தியா நிறுவனத்துக்குப் பல ஆயிரம் கோடிகள் வருமானமாகக் கிடைக்கப்போகிறது. அப்படிப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு வெறும் 23 லட்ச ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதை, நில உரிமையாளர்கள் மட்டுமல்ல, மக்கள் பிரதிநிதிகளான எங்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் முப்போகம் பயிரிடப்படுகின்ற பொன் விளைகின்ற நிலங்களாகும். ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் மேல் வருமானம் தரக் கூடிய அந்த நிலங்கள், ஏக்கருக்கு 50 லட்சத்துக்கும் மேல் விற்பனையாகி வந்தவை. அதேபோல், வீட்டுமனைகள் சென்ட்டுக்கு 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது. ஆனால் இவர்கள் 40 ஆயிரம் என்று நிர்ணயித்திருக்கிறார்கள். அதேபோல், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு என்எல்சியில் நிரந்தர வேலை வழங்குவதுதான் அவர்களின் எதிர்காலப் பாதுகாப்புக்கு ஒரே தீர்வாக இருக்கும்” என்றார் அருண்மொழிதேவன்.

மேலும், “1956-ல் சில லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட என்எல்சி நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 53,488 கோடி ரூபாய். ஆண்டு வருமானம் 11,592 கோடி ரூபாய். இத்தனை வளர்ச்சிக்கும் 44 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வழங்கிய 37,256 ஏக்கர் நிலங்கள்தான் காரணம். இன்றைய தேதியில் அங்கு பணியாற்றும் 11,511 நிரந்தரப் பணியாளர்களில் ஒருவர்கூட நிலம் கொடுத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதுதான் வேதனை.

1977-89 காலத்தில், நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 1,827 பேருக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டது. அவர்களும் ஓய்வு பெற்றுவிட்டனர். 1989-க்குப் பிறகு நிலம் கொடுத்தோரில் சுமார் 3,500 பேருக்குக் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தப் பணி மட்டுமே வழங்கப்பட்டது. என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்கள், தங்களது வாழ்கைக்கு எவ்வித உத்திரவாதமும் இன்றி தினக்கூலிகளாகப் பணியாற்றி வருகின்றனர்.

எனவே, இம்முறை அப்படி மக்கள் ஏமாறத் தயாராகயில்லை. நாங்களும் இதை அப்படியே விட்டுவிடப் போவதில்லை. அனைவரிடமும் முறையாக, நியாயமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கும், வீட்டுமனைகளுக்கும் உரிய விலை வழங்க வேண்டும். நிலம் கொடுக்கும் குடும்பங்களில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். அதோடு ஏற்கெனவே நிலம் கொடுத்தவர்களுக்கும் உரிய இழப்பீடும், நிரந்தர வேலை வாய்ப்பும் வழங்கவும் என்எல்சி இந்தியா நிறுவனம் முன்வர வேண்டும். இதை வலியுறுத்தி எங்கள் கட்சித் தலைமையின் ஒப்புதலோடு அடுத்தகட்ட நகர்வுகளைச் செய்ய இருக்கிறோம்” என்கிறார் அருண்மொழிதேவன்.

இதுகுறித்து என்எல்சி அதிகாரிகளிடம் பேசினோம்.

‘’மூன்றாவது சுரங்கப் பணிகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டிலேயே அறிவிப்பு கொடுக்கப்பட்டுவிட்டது. 2019-ல் இழப்பீட்டுத் தொகை உட்பட அனைத்து விஷயங்களும் வரையறை செய்யப்பட்டுவிட்டன. அந்த மக்களுக்கும் இது நன்கு தெரியும். ஆனால், இதை இப்போதுதான் புதிதாக அறிவிப்பதுபோல சிலர் திசைதிருப்புகிறார்கள். பெரும்பாலான மக்கள் இதை ஒப்புக்கொண்டு பணத்தையும் பெற்றுக்கொண்டுவிட்டார்கள். அவர்களுக்கான மாற்று இடமும் தயாராக இருக்கிறது. இந்த நிலையில் ஒருசிலர் ஏதோ ஆதாயம் கருதி இதை வேண்டுமென்றே பெரிதாக்குகிறார்கள். மற்றபடி பாதிக்கப்படும் மக்களுக்கான நியாயமான அனைத்து கோரிக்கைகளும் என்எல்சியால் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்” என்கிறார்கள் என்எல்சி அதிகாரிகள்.

வளர்ச்சி முக்கியம்தான்; அது மக்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பதாக அமைந்துவிடக் கூடாது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in