`ஆழ்துளை கிணற்றால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும்'

மக்கள் கருத்தை கேட்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை
`ஆழ்துளை கிணற்றால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும்'
கிஷோர் குமார்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் அரசு சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படவுள்ள விவகாரத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை உடனடியாக கூட்டவேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர்குமார் கூறுகையில். ``திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, மேலூர் செட்டி தோப்பு மற்றும் பண்ணைதோப்பு பகுதிகளில் திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தங்களது நிலத்தடி நீர் ஆதாரம் வெகுவாக பாதிக்கப்படும் என்று மேலூர் பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் மேற்படி ஆழ்துளை கிணற்றால் நாள்தோறும் உறிஞ்சப்படும் கோடிக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீருக்கு பதிலாக அதே அளவு நிலத்தடி நீரை சேமிக்கும் மாற்று திட்டம் எதுவும் திருச்சி மாவட்ட நிர்வாகம் வகுத்ததாக இதுவரை தெரியவில்லை. எனவே பொதுமக்களின் அச்சத்திற்கு நியாயம் இருப்பதாகவே மக்கள் நீதி மய்யம் கட்சி கருதுகிறது. எனவே மேலூர் பகுதி பொதுமக்களின் நியாயமான இந்த கோரிக்கைக்கு மக்கள் நீதி மய்யம் தார்மீக ரீதியாக மக்களுடன் துணை நிற்கும்.

திருச்சி மாவட்ட ஆட்சியரும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்படி மேலூர் செட்டிதோப்பு மற்றும் பண்ணை தோப்பு பகுதிகளில் அரசு சார்பில் ஏற்படுத்தப்படும் ஆழ்துளை கிணறு தொடர்பாக பொதுமக்களின் நியாயமான அச்சத்தை மற்றும் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் விதமாக உடனடியாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை கூட்டி மக்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.