பட்டாவுக்கு 12 வருட போராட்டம்: விடியலைச் சந்தித்த வேளாங்கண்ணி மக்கள்!

பட்டாவுக்கு 12 வருட போராட்டம்: விடியலைச் சந்தித்த வேளாங்கண்ணி மக்கள்!
பட்டா வழங்கல்

சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடுவாசலை இழந்த வேளாங்கண்ணி கடற்கரைப் பகுதி மக்கள், பாதுகாப்பான வேறிடத்துக்குக் குடிபெயர்ந்தனர். இந்நிலையில் அந்த இடத்துக்கு பட்டா கிடைக்காமல், 12 ஆண்டு காலமாகப் போராடிவந்தனர். அவர்களுக்கு தற்போது பட்டா வழங்கப்பட்டதால், தங்களுக்கு விடியல் வந்திருப்பதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் சுகாதாரப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவரும் அருந்ததியர் மற்றும் பட்டியலினத்து மக்கள் கடற்கரையோரப் பகுதிகளில் குடிசை போட்டு வசித்துவந்தனர். 2006-ம் ஆண்டு சுனாமியின்போது பேரலையால் அவர்களின் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. பலரும் உயிரிழந்தார்கள். வீடுவாசலை இழந்து தவித்த அவர்களில் பலரும் வேளாங்கண்ணி பேராலயத்துக்குச் சொந்தமான செட்டித்தெரு என்கிற இடத்தில், தற்காலிகமாகக் குடியமர்த்தப்பட்டனர். மீதமுள்ள 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்க இடமில்லாமல் தவித்தபோது, அப்போது பேரூராட்சி மன்ற உறுப்பினராக இருந்த தாமஸ் ஆல்வா எடிசன் ஏற்பாட்டின் பேரில், அவரது கட்டுப்பாட்டில் இருந்த பூக்காரத் தெருவில் அவர்கள் குடியமர்த்தப்பட்டனர்.

பெரியாயி
பெரியாயி

2 இடங்களிலும் வசிக்கும் மக்கள் தாங்களாகவே வீடுகள் கட்டிக்கொண்டு வசித்து வருகின்றனர். ”நாங்க இருக்கிற இடத்துக்குப் பட்டா கொடுங்கன்னு பலமுறை அரசாங்க அதிகாரிங்ககிட்டயும், ஆளுங்கட்சிக்காரங்க கிட்டயும் அலையோ அலைன்னு அலைஞ்சோம். ஆனா யாரும் அதுக்காக மெனக்கெடல. செட்டித்தெரு இடம் பேராலயத்துக்குச் சொந்தம்கிறதால அதுக்கு பட்டா கொடுக்க முடியாதுன்னுட்டாங்க. பட்டா இல்லாததால அரசாங்க திட்டத்தில நல்ல வீடு கட்டிக்கக்கூட முடியல. தேர்தலுக்கு முன்னாடி ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி இங்க பிரதாபராமபுரத்துல நடந்துச்சு. அதுல போய் கலந்துகிட்டு, ஸ்டாலின் அவர்களிடம் பட்டா கேட்டு மனு கொடுத்தோம். அதுக்கு நல்ல பலன் கிடைச்சிருக்கு. இப்ப பட்டா கொடுத்துட்டாங்க” என்று மகிழ்கிறார் செட்டித்தெருவைச் சேர்ந்த பெரியாயி.

வேளாங்கண்ணி பேராலயம்
வேளாங்கண்ணி பேராலயம்

இதேபோல பூக்காரத்தெருவில் வசித்த மக்களும் ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பட்டா கேட்டு மனு அளித்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கீழையூர் ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தேவாலய நிர்வாகத்திடம் பேசினார். தேவாலயத்துக்குச் சொந்தமான செட்டித்தெரு பகுதியில் 249 குடும்பங்கள் வசித்துவந்தன. அந்த இடத்துக்கு இன்றைய மார்க்கெட் மதிப்பு ரூ.2 கோடி. இருந்தாலும் அதை அம்மக்களுக்கே வழங்கிட தேவாலய நிர்வாகம் முன்வந்தது.

அதேபோல, 27 குடும்பங்கள் வசித்த பூக்காரத் தெரு இடம் தாமஸ் ஆல்வா எடிசன் வசமிருந்தது. ஒவ்வொருவர் வசிக்கும் இடமும் இரண்டரை லட்ச ரூபாய் மதிப்புக்குரியது. அவற்றையும் அங்கு வசிக்கும் மக்களுக்கே வழங்கிட முன்வந்தார். அதையடுத்து, அதிகாரிகள் மூலம் மற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. செட்டித் தெருவில் உள்ள 249 பேரில், முதற்கட்டமாக 227 குடும்பங்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். மீதமுள்ளவர்களுக்கும் விரைவில் வழங்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

நான்சி
நான்சி

’’பட்டா இல்லாததால எப்ப வேணுன்னாலும் காலி செய்யச் சொல்வாங்களோன்னு திக்திக்குன்னு இருந்தோம். பட்டா கேட்டு 12 வருசமா போராடிப்பார்த்துட்டு, பட்டா கிடைக்காதுன்னு சோர்ந்து போயிட்டோம். சரி எதுக்கும் இருக்கட்டுமேன்னுதான் ஸ்டாலின் அவர்களிடம் மனு கொடுத்தோம். நிச்சயம் உங்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்னு ஸ்டாலின் அப்ப சொன்னார். அப்பகூட நாங்க நம்பல. ஆனா சொன்னதை சொன்னபடி நிறைவேற்றி வைச்சுட்டாங்க. முதல்வருக்கும், இடத்தையும் கொடுத்து, இதுக்கு முழுமூச்சா பாடுபட்ட தாமஸ் ஆல்வா எடிசனுக்கும் ரொம்பரொம்ப நன்றி” என்று முகமலர்ந்து சிரிக்கிறார் பூக்காரத் தெரு நான்சி.

ஏழையின் சிரிப்பில்...

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in