மருத்துவர்கள் வரவில்லை என்றால் இனி நோயாளிகளே புகார் செய்யலாம்!

சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிரடி
மருத்துவர்கள் வரவில்லை என்றால் இனி நோயாளிகளே புகார் செய்யலாம்!
மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளும் ராதாகிருஷ்ணன்

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் உரிய நேரத்தில் வரவில்லை என்றால் நோயாளிகள் மற்றும் பொதுமக்களே புகார் செய்யலாம் என்று தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், இன்று திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், புதியதாக அமைக்கப்பட்டு வரும் உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு படுக்கை தலா ரூ.2.90 லட்சம் மதிப்பில் மொத்தம் 32 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவில் 32 படுக்கைகளில் 20 படுக்கைகள் பெரியவர்களுக்கும், 12 படுக்கைகள் சிறுவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ராதாகிருஷ்ணன், மேலும் இந்த வார்டில் அமையவுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை மேற்கொள்ளும் ராதாகிருஷ்ணன்
ஆலோசனை மேற்கொள்ளும் ராதாகிருஷ்ணன்

அதனைத் தொடர்ந்து திருச்சி அரசுத் தலைமை மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்திக்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி 1.22 கோடி பேர் இதுவரை போட்டுக்கொள்ளவில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை முந்தைய அளவில் இல்லாமல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100-க்கும் கீழேதான் இருக்கிறது. அது மேலும் பரவாமல் இருக்க பொதுமக்களுக்கு எனது வேண்டுகோள், கரோனா மெகா தடுப்பூசி முகாமில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

குரங்கு அம்மை நோய்க்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகளிடம் சோதனை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

மேலும், “பயோமெட்ரிக் முறையை அடிப்படையாகப் படிப்படியாக அனைத்து மருத்துவமனைகளும் செயல்படுத்த உள்ளோம். மருத்துவமனையில் மருத்துவர்கள் வராமலிருந்தால் நோயாளிகளே புகார் செய்யலாம். தவறு செய்யும் மருத்துவர்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். செல்போனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இணைய அடிமை மையம் திறக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர்களுக்கு ஆலோசனையும் சிகிச்சையும் வழங்கப்படும். பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்குப் பரிசீலனை நடந்து வருகிறது" என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் கே. வனிதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் அருண்ராஜ் மற்றும் மருத்துவத் துறை , சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in