ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கைது செய்யப்பட்டது ஏன்?

ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கைது செய்யப்பட்டது ஏன்?
கைது செய்யப்பட்ட ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் சரண்யா

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை காலணியால் தாக்கிய ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கைது செய்யப்பட்டார்.

மே தினத்தை முன்னிட்டு கண்டமங்கலம் ஊராட்சியில் இன்று கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் சிவகாசி தலைமையில் நடந்தது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்றத்துணை தலைவர் சரண்யா, கிராம நிர்வாக அலுவலர் ராஜம், ஊராட்சி செயலாளர் சங்கர், மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஊராட்சி செயலர் சங்கர் வரவு, செலவு கணக்கை படித்துக் கொண்டிருந்தார். அப்போது ஊராட்சி துணைத்தலைவர் சரண்யா திடீரென எழுந்து சென்று துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனை தன் காலில் போட்டிருந்த காலணியைக் கழற்றி அடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார்.

அருகில் இருந்தவர்கள் அவரை சாந்தப்படுத்தி அழைத்துச் சென்றனர். இது குறித்து காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து காவல் ஆய்வாளர் ஏழுமலை மற்றும் போலீஸார் துணை வட்டார வளர்ச்சி ரவிச்சந்திரன் மற்றும் அவரை தாக்கிய ஊராட்சி துணைத் தலைவர் சரண்யா ஆகிய இருவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கிராம பொதுமக்கள் ஊராட்சி துணைத் தலைவரை கைது செய்ய வேண்டும் என கூறி சாலை மறியல் போராட்டம் செய்ய முயன்றனர். அவர்களை சமாதனம் செய்த வந்த சேத்தியாதோப்பு துணைக் காவல் கண்காணிப்பாளர் சுந்தரம் உள்ளிட்ட காவல் துறையினரை அவர்கள் முற்றுகையிட்டனர்.

ஊராட்சி துணைத் தலைவர் மீது காவல்துறை சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளும் என்று போலீஸார் உத்தரவாதம் அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த நிலையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் காட்டுமன்னார் காவல் நிலையத்தில் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தன்னை செருப்பால் அடித்து தாக்கியதாகவும் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஊராட்சி துணைத்தலைவர் சரண்யாவை கைதுசெய்தனர்.

Related Stories

No stories found.