எதற்காக காத்திருந்தார் ஓ.எஸ்.மணியன்?

எதற்காக காத்திருந்தார் ஓ.எஸ்.மணியன்?
தனது ஆதரவாளர்களுடன் நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் காத்திருந்த ஓ.எஸ்.மணியன்

தனது ஊருக்கு அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உடனடியாக ஆசிரியரை நியமிக்க கோரி நாகப்பட்டினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்த வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன். மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தனது காத்திருப்பை கைவிட்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம், வண்டல் என்ற சிற்றூரில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளிக்கு ஒரு தலைமையாசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தலைமையாசிரியர் பணியிடம் காலியாக இருக்கிறது. ஒரு ஆசிரியர் மட்டுமே பணிபுரிந்து வந்தார். இருந்த அந்த ஒரு ஆசிரியரும் சொந்த பிரச்சினை காரணமாக விடுப்பில் சென்றுவிட்டார். அதனால் அந்த பள்ளியில் ஆசிரியர்கள் யாரும் இல்லாத நிலை கடந்த சில மாதங்களாக நிலவி வருகிறது.

இதனால் இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 35 மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் தினமும் பள்ளிக்கு வந்து திரும்புகின்றனர். அதனால் உடனடியாக இப்பள்ளிக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடமும் இதுகுறித்து முறையிட்டு ஆசிரியர் நியமிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இருந்தாலும் இதுவரை ஆசிரியர் நியமிக்கப்படவில்லை என்பதால் இன்று காலை 11:30 மணி அளவில் நாகப்பட்டினத்தில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்கள் சிலருடன் நேரில் வந்தார். அப்போது அங்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இல்லை. அதனால் அவர் வரும்வரை காத்திருப்பதாகக் கூறி அலுவலகத்திலேயே அமர்ந்துவிட்டார்.

சிறிது நேரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் வந்து சேர்ந்தார். அங்கு காத்திருந்த ஓ.எஸ்.மணியனிடம் இன்னும் ஒரு வார காலத்தில் வண்டல் பள்ளியில் ஆசிரியர் நியமிக்கப்படுவார் என்று உறுதியளித்தார். ஆனால் இன்றே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்திய மணியன் அதுவரை அங்கேயே காத்திருக்க போவதாக கூறிவிட்டு அமர்ந்துவிட்டார். மதியம் உணவு அருந்தவும் செல்லவில்லை. அவருடன் நாகப்பட்டினம் நகர அதிமுக செயலாளர் தங்க கதிரவன் உள்ளிட்ட சிலரும் காத்திருந்தனர்.

மாலை 4 மணி வரை அவர்கள் காத்திருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மணியனிடம் பேசினார். இன்னும் ஒரு வார காலத்தில் நிச்சயம் வண்டல் பள்ளிக்கு ஆசிரியர் நியமிக்கப்படுவார் என்று ஆட்சியர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் காத்திருப்பை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.

Related Stories

No stories found.