குதிரை பந்தயத்துக்கு தயாராகும் ஊட்டி

குதிரை பந்தயத்துக்கு தயாராகும் ஊட்டி

உதகை கோடை சீசனின் முக்கிய நிகழ்வான குதிரை பந்தயத்துக்காக மைதானத்தை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பந்தயத்தில் பங்கேற்கும் குதிரைகள் உதகைக்கு வர தொடங்கியுள்ளன.

கோடை சீசனின் போது நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தமிழ்ப்புத்தாண்டு அன்று தொடங்கி ஜூன் மாதம் வரை மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் உதகையில் குதிரை பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.

பந்தயத்துக்காக பெங்களூரு, சென்னை, பூனா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பந்தய குதிரைகள் வரவழைக்கப்படும். பந்தயங்கள் தொடங்க இரண்டு வார காலமே உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களிலிருந்து உதகைக்கு குதிரைகள் அழைத்து வரப்பட்டுள்ளன.

குதிரை பந்தயங்கள் தொடங்வுள்ளதால், மைதானத்தை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான குதிரைகள் ஓடும் பாதையில் உள்ள புற்கள் உரமிட்டு, சமன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஓடுதளத்தில் உள்ள புற்கள் நன்றாக ஒரே சீராக வளர தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. நடப்பாண்டு இதுவரை சரிவர மழை பெய்யாததால், ஓடு தளத்தை பராமரிக்க லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருவதாக மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சுமார் இரண்டு மாதங்கள் நடக்கும் குதிரை பந்தயங்கள் சிறப்பாக நடத்த பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. கரோனா காரணமாக 2020-ம் ஆண்டு உதகை குதிரை பந்தயங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு கரோனா கட்டுபாட்டுகளை அரசு விதித்ததால், பார்வையாளர்கள் அனுமதியில்லாமல் பந்தயங்கள் நடத்தப்பட்டன. இந்தாண்டு கரோனா பரவல் குறைந்துள்ளதால், பார்வையாளர்கள் பந்தயங்களை காண அனுமதிப்படுவார்கள் என்பதால், பந்தயத்துக்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் மெட்ராஸ் ரேஸ் கிளப் செய்து வருகிறது.

Related Stories

No stories found.