நள்ளிரவு நேரம்... உடலில் ஏறி இறங்கிய சப்பரம்... திருவிழாவில் பறிபோன உயிர்
தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் நடந்த சப்பர விபத்தில் 11 பேர் உயிரிழந்த அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த சம்பவமாக நாகை அருகே இன்று அதிகாலை நடந்த கோயில் திருவிழாவில் சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெருவடைத்தான் சப்பரம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதற்காக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி உற்சவர் சிலை வைக்கப்பட்டு முக்கிய வீதிகளில் வலம் வந்தது. தீபராஜன் என்ற தொழிலாளி சக்கரத்திற்கு முட்டுக்கட்டை போடும் பணியை செய்து வந்தார்.
தெற்கு வீதியில் சப்பரம் திரும்பும்பொழுது அதனடியில் தீபராஜன் முட்டுக்கட்டை வைத்து சப்பரத்தை திருப்பும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் சக்கரத்தில் சிக்கினார். அவரது வயிற்றுப் பகுதியில் சப்பரத்தின் சக்கரம் ஏறியது. படுகாயமடைந்த அவரை மீட்டு உறவினர்கள் திருமருகலில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால், சப்பரத்தின் ராட்சத சக்கரம் தீபராஜனின் வயிற்றில் ஏறி இறங்கியதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. சிறுத்தொண்ட நாயனார் கதை நிகழ்ந்த தலமாக கூறப்படும் திருச்செங்காட்டங்குடியில் பல நூறு ஆண்டுகளாக திருவிழா நடைபெற்று வருகிறது. அதில், உயிரிழந்த தீபராஜன் குடும்பத்தினர்தான் காலங்காலமாக முட்டுக்கட்டை போடும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி பாரம்பரியமும் நீண்ட அனுபவம் கொண்ட தீபராஜன், சப்பர சக்கரத்தின் அடியில் சிக்கி உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருக்கண்ணபுரம் போலீஸார் கோயில் நிர்வாகத்தினர், உறவினர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.