24 மணி நேரத்தில் 15 மணிநேரம் பூட்டிக்கிடக்கும் ரயில்வே கேட்!

தவித்த மக்களின் துயரத்தைப் போக்கிய பட்ஜெட்
24 மணி நேரத்தில் 15 மணிநேரம் பூட்டிக்கிடக்கும் ரயில்வே கேட்!
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம்

நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு அருகே, ஊட்டுவாழ்மடம் செல்லும் சாலையை சுரங்க நடைபாதையாக மாற்றம் செய்து அமைக்க, பட்ஜெட்டில் ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைக் குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வெகுவாக வரவேற்றுள்ளது.

இதுகுறித்து குமரிமாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் காமதேனு இணையதளத்திடம் கூறும்போது, “நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு பின்புறம் உள்ள பகுதிகளான ஊட்டுவாழ்மடம், கருப்புக்கோட்டை, இலுப்பையடி ஆகிய பகுதிகளில் சுமார் 500 குடும்பங்கள் குறிப்பாக விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நாகர்கோவில் நகருக்கு வரவேண்டுமானால் ரயில் நிலையம் அருகில் உள்ள சாலை வழியாகத்தான் வரவேண்டியுள்ளது.

இந்தப் பகுதியில் அதிக அளவில் விவசாய குடும்பங்கள் வசித்து வருவதால், விவசாயத்துக்கு தேவையான உரங்கள் மற்ற பொருட்கள் கொண்டு செல்ல இந்த சாலையைத்தான் இந்தப் பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு வரும்போது ஆர்ஆர்ஐ கேபின் அருகில் ஓர் ரயில்வே கிராசிங் (எண் 36) உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் வெளியே செல்லும்பகுதியில் இருப்பதால், இந்த கிராசிங் தினசரி அதிக நேரம் மூடியே இருக்கிறது. இதனால் இந்தப் பகுதியைச் சார்ந்த மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக அவசர மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்களில் மருத்துவமனைகளுக்குச் செல்லும் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

எஸ்.ஆர்.ஸ்ரீராம்
எஸ்.ஆர்.ஸ்ரீராம்

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் அமைந்துள்ள நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வழியாக 22 எக்ஸ்பிரஸ் ரயில்களும், 7 பயணிகள் ரயில்களும் நின்று செல்கிறது. இந்த ரயில் நிலையத்திலிருந்து 11 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 6 பயணிகள் ரயில்கள் புறப்பட்டு செல்கின்றன. இந்த ரயில் நிலையம் முனைய ரயில் நிலையமாக இருப்பதால், இங்கிருந்து புறப்படும் 17 ரயில்கள் புறப்படுவதற்கு 30 முதல் 60 நிமிடங்களுக்கு முன்பு காலி ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள் நிறைவுபெற்று, நடைமேடையில் கொண்டு நிறுத்தப்படும். இவ்வாறு ரயில்கள் நிறுத்தப்படும்போது ரயில்வே கேட் மூடப்படும். அடுத்து 30 நிமிடங்கள் கழித்து அந்த ரயில் பயணிகளை ஏற்றிவிட்டு புறப்படும்போது மீண்டும் இந்த ரயில்வே கேட் மூடப்படும். இவ்வாறு ஒரு ரயில் புறப்பட வேண்டுமானால் இரண்டு முறை ரயில்வே கேட் மூடப்படும். மற்ற இடங்களில் உள்ள ரயில்வே கேட்களை காட்டிலும் இந்த கேட் தினசரி அதிக நேரம் மூடப்பட்டிருக்கும். இவ்வாறு இந்த கேட் தினசரி தோராயமாக 50 முதல் 75 முறை மூடப்படுகின்றது. ஒருசில சமயங்களில் இந்த கேட் அதிக நேரம் மூடப்பட்டிருக்கும், ஆனால் ரயில்கள் ஒன்றும் வராது. ஏன் மூடப்பட்டிருக்கின்றது என்று பார்த்தால், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் காலி ரயில் பெட்டிகளை ஒரு நடைமேடையிலிந்து அடுத்த நடைமேடைக்கு மாற்றம் செய்யும் போதும்கூட இந்த கேட் பாதுகாப்பு கருதி மூடப்படும். இதனால் 24 மணி நேரத்தில் சுமார் 15 மணி நேரம்வரை இந்த கேட் மூடப்பட்டிருக்கும்.

இதனால் இந்தப் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை மாற்றம் செய்துவிட்டு, சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்துவந்தனர். இதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருந்தபோதே அதிக முயற்சி எடுத்தார். ரயில்வே உயர் அதிகாரிகளை நேரில் அழைத்துவந்தும் காட்டினார். இதன்பலனாக இந்த வருட பிப்ரவரியில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிங்புத்தகம் வழியாக அறிவிக்கப்பட்டது. தற்போது சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டு இதற்காக ஒரு கோடிரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட இருக்கின்றன. தற்போது நாகர்கோவில் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகின்றன. இந்த விரிவாக்கப் பணிகள் நடைபெறும்போது இந்த சுரங்கப்பாதை பணிகளும் சேர்த்தே நடைபெறும். இந்த சுரங்க நடைபாதை 10 மீட்டர் அகலமும், 5 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்பட இருக்கிறது. இந்த சுரங்கப்பாதை பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு வரும்போது, இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எந்த ஒரு சிரமமுமின்றி எளிதாக நாகர்கோவில் நகருக்கு பல்வேறு பணிகள் நிமித்தம் வந்துசெல்ல முடியும். இதற்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றியை தெரிவிக்கிறோம்’’ என்றார்.

Related Stories

No stories found.