கோவையில் நாளை ஒன்றரை லட்சம் தடுப்பூசிகள் செலுத்த திட்டம்!

கோவையில் நாளை ஒன்றரை லட்சம்  தடுப்பூசிகள் செலுத்த திட்டம்!

கோவை மாவட்டத்தில் நாளை (12.09.2021) ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும் காதி மற்றும் கதர் கிராமிய வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலருமான பொ.சங்கர் இன்று அனைத்துத் துறை அலுவலர்களுடன் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், மாநகரக் காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மருத்துவ உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கு முன்னதாகக் கண்காணிப்பு அலுவலர் மாநகராட்சி பகுதியில் செயல்பட்டுவரும் கரோனா தடுப்பூசி மையங்களான புலியகுளம் புனித அந்தோணியார் மேலநிலைப் பள்ளியிலும், உப்பிலிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், வ.உ.சி மைதானத்திலும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆலோசனை கூட்டம்
ஆலோசனை கூட்டம்

கோவையில் நடைபெறும் இந்த மெகா கரோனா தடுப்பூசி முகாம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கர், ‘‘மெகா கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம், தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கேரள மாநில எல்லையோர மாவட்டங்களான கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. கோவையில் நடைபெறும் இம்முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள பகுதிகள், மலைப்பகுதிகள், போக்குவரத்து வசதியற்ற பகுதிகள், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகள் என ஊரகப் பகுதிகளில் 1,167 முகாம்கள், மாநகராட்சிப் பகுதிகளில் 308 முகாம்கள் என மொத்தம் 1,475 இடங்களில் இந்தத் தடுப்பூசி முகாம்கள் செயல்படவுள்ளன. அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரத் துறை மருத்துவர்கள், செவிலியர்கள், தனியார் மருத்துவமனை பணியாளர்கள், தன்னார்வலர்கள் பணியாற்றிட உள்ளனர்.

அதன்படி ஒரு முகாமிற்கு ஒரு தடுப்பூசி செலுத்துபவர், ஒரு கணினி பதிவாளர், இரண்டு உதவியாளர்கள் என 4 நபர்கள் வீதம் 5,900 நபர்கள் பணியாற்றவுள்ளனர். ஒவ்வொரு முகாமிலும் வயது முதிர்ந்தோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பிரத்யேகத் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1.5  இலட்சம் மக்கள் தடுப்பூசி பெற்று பயனடையும் வகையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களும், 2-ம் தவணை பெறத் தகுதியுள்ள நபர்களும் தவறாமல் கலந்துகொண்டு பயனடையவும்” எனத் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in