உடைந்த ஓஎன்ஜிசி குழாய்... பரவிய எண்ணெய்: ஐந்து வருடத்துக்கு விவசாயம் இருக்காது!

உடைந்த ஓஎன்ஜிசி குழாய்... 
பரவிய எண்ணெய்: ஐந்து வருடத்துக்கு விவசாயம் இருக்காது!
விளைநிலத்தில் பரவியிருக்கும் எண்ணெய்யைப் பார்வையிடும் அதிகாரிகள்

திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஓஎன்ஜிசி நிறுவனம் நிலத்தடியிலிருந்து எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதற்காக விவசாய நிலங்களில் குறுக்கும் நெடுக்குமாக எண்ணெய்க் குழாய்கள் போடப்பட்டிருக்கின்றன. அதில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு எண்ணெய் கசிந்து, அதன் விளைவாக விவசாய நிலம் பாதிக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறது.

அந்த வகையில் இன்று மேலும் ஒரு குழாய் உடைந்து எண்ணெய் கசிந்திருக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. கோட்டூர் அருகே கருப்புக்கிளார் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற விவசாயிக்குச் சொந்தமாக உக்கடை கமலாபுரம் கிராமத்தில் ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தின் வழியாக நல்லூருக்குச் செல்லும் ஓஎன்ஜிசி எண்ணெய் குழாயில் இன்று உடைப்பு ஏற்பட்டது. அதிலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் முழுவதுமாக விளைநிலத்தில் பரவியது.

தகவலறிந்து வந்த கோட்டூர் போலீஸார் இதுகுறித்து ஓஎன்ஜிசி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்துக்கு வந்த ஓஎன்ஜிசி அலுவலர்கள் உடைப்பைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே எண்ணெய்க் குழாய் உடைந்த இடத்தை மன்னார்குடி கோட்டாட்சியர் அழகர்சாமி, வட்டாட்சியர் ஜீவானந்தம் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

ஓஎன்ஜிசி அலுவலர்களிடமும், விவசாயியிடமும் பாதிப்பின் தன்மை குறித்தும், அவற்றைச் சீர்படுத்திக் கொடுப்பது குறித்தும் கேட்டறிந்தனர். பாதிக்கப்பட்ட விவசாய நிலத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளதால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in