ஒரு கரோனா நோயாளிகள்கூட மருத்துவமனையில் இல்லை: எங்கே தெரியுமா?

ஒரு கரோனா நோயாளிகள்கூட மருத்துவமனையில் இல்லை: எங்கே தெரியுமா?

ஒரு கரோனா நோயாளிகள்கூட அரசு மருத்துவமனையில் இல்லாத நிலை அடைந்துள்ளது. அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்த சந்தோசமான நிகழ்வு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில்தான் நடந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு ஊடுருவிய கரோனா தொற்று மக்களை இன்று வரை அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. முதல் அலையில் ஆயிரக்கணக்கான உறவுகளை காவு வாங்கியது கரோனா வைரஸ். மக்கள் ஒருவகை பீதிக்கு ஆளானார்கள். இந்த சூழ்நிலையில், 2021-ல் ஏற்பட்ட கரோனா 2-வது அலையில் லட்சக்கணக்கானோர் கரோனாவுக்கு உயிரிழந்தனர். டெல்லி, தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பல உயிரிழப்புகளை சந்திக்க நேரிட்டது. குறிப்பாக தமிழகத்தில், அனைத்து அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நின்றது. பலர் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே மரணித்துப் போனார்கள்.

சென்னையில்தான் கரோனாவால் அதிக பாதிப்பு ஏற்பட்டது. தனியார் மருத்துமனைகளில் இடமே கிடைக்கவில்லை. மைதானங்கள் கரோனா மருத்துவமனையாக உருவாக்கப்பட்டது. அதிக உயிரிழப்புக்கு கரோனா தடுப்பூசி போடாததே காரணம் என்று கூறப்பட்டது. லட்சக்கணக்கான மக்களை பலி கொண்ட கரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்தது. 3-வது அலையில் மக்களுக்கு சிறிய அளவிலேயே பாதிப்பு ஏற்பட்டது. உயிரிழப்புகளும் அந்த அளவுக்கு இல்லை. தற்போது, இந்தியாவில் படிப்படியாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. பல மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடு முழுமையாக நீக்கப்பட்டுவிட்டது. தமிழகத்திலும் கரோனா பாதிப்பு மிகவும் குறைந்துவிட்டது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 17,186 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 28 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 10 பேர் உள்பட 10 மாவட்டங்களில் மட்டும் தொற்று பதிவாகி உள்ளது. 28 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. 12 வயதுக்கு உட்பட்ட 6 குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 8 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 12 மாவட்டங்கள் கரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளன.

தமிழகத்தில் தொடர்ந்து 25-வது நாளாக நேற்று கரோனாவால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை. இதுவரை 38,025 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி 229 பேர் கரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 21 பேர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் சந்தோசமான அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. 2 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சையிலிருந்த அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் 4-வது அலை ஜூனில் வர வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் அலர்ட்டாக இருப்பது நல்லது.

Related Stories

No stories found.