நள்ளிரவில் சைக்கிளில் திடீர் ஆய்வு... அதிர்ந்த இரவு காவலர்கள்

வடசென்னையில் கலக்கும் இணை ஆணையர் ரம்யா பாரதி
நள்ளிரவில் சைக்கிளில் திடீர் ஆய்வு... அதிர்ந்த இரவு காவலர்கள்

சென்னை வடக்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் ரம்யா பாரதி நேற்று நள்ளிரவில் திடீரென சைக்கிளில் சென்று இரவு ரோந்து காவலர்களை கண்காணித்ததோடு, காவல் நிலையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். இணை ஆணையரின் இந்த திடீர் விசிட்டால் காவலர்கள் அதிர்ந்து போனார்கள்.

அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். "தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு குறித்து நான் சமரசம் செய்து கொள்ளமாட்டேன்" என்று கறாராக பேசினார். முதல்வரின் இந்த பேச்சு காவல்துறையினர் மத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். "பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் செல்போன்களை பயன்படுத்தக்கூடாது. சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும். வந்தவுடன் புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். அதேபோல் பணி முடிந்து போகும்போது இன்று என்னென்ன வேலைகளை பார்த்தேன் என்ற விவரங்கள் அனுப்ப வேண்டும். மேலும், பணி முடிந்துப்போகும் போதும் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும்" என்பது சென்னை காவலர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு.

இந்த சூழ்நிலையில், விருதுநகர், வேலூர் சம்பவங்கள் காவல்துறைக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. எதிர்க்கட்சிகள் இதை வைத்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. விருதுநகர் சம்பவத்தில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுவிட்டனர் என்றும் நீதிமன்றத்தில் மூலம் விரைவில் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்றும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை செய்யும் என்றும் முதல்வர் அதிரடியாக அறிவித்தார்.

இந்நிலையில், சென்னை வடக்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் ரம்யா பாரதி நேற்று நள்ளிரவில் திடீரென சைக்கிளில் சென்று காவலர்களை கண்காணித்துள்ளார். இவரது இந்த திடீர் ஆய்வு காவலர்களை பதறவைத்துள்ளது என்றே சொல்லலாம். சென்னை பாரிமுனை பூக்கடையில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை 8 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட சரகங்களில் சைக்கிளில சென்று இணை ஆணையர் ரம்யா பாரதி ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக இரவில் ரோந்து பணியில் இருக்கும் காவலர்கள் முறையாக பணி செய்கிறார்களா என ஆய்வு செய்தார். அப்போது, இரவு முழுவதும் விழித்திருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். ரம்யா பாரதி போல் நள்ளிரவு ஆய்வை மற்ற உயரதிகாரிகள் செய்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எது எப்படியோ, இரவில் பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு கிடைத்தால் போதும்.

Related Stories

No stories found.