நாளை மறுநாள் திருமணம்... இரவில் பறிபோன புதுமாப்பிள்ளையின் உயிர்: சோகத்தில் கிராமம்

வீரமணி
வீரமணி

நாளை மறுதினம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் கடைவீதி சென்று திரும்பிய புது மாப்பிள்ளை பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலத்தை அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து மகன் வீரமணி (24). என்.எல்.சியில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு நாளை மறுதினம் (26-ம் தேதி) திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், இவர் தனது குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக நேற்று இரவு விருத்தாசலம் கடைவீதிக்குச் சென்றிருந்தார். இரவு 9 மணியளவில், மளிகை சாமான் வாங்கிகொண்டு விருத்தாசலம் – கடலுார் சாலையில் தனது கிராமத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது புதுக்கூரைப்பேட்டையில் உள்ள தனியார் நர்சரி கார்டன் அருகே சென்றபோது, கடலுாரில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த தனியார் பேருந்து வீரமணியின் இரு சக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. அதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து விருத்தாசலம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். நாளை மறுதினம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மாப்பிள்ளை இப்படி எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்த சம்பவம், அக்கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in