
முட்டம்- தலக்குளம் சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்னும் பொதுமக்களின் நெடுநாள் கோரிக்கை இன்று நிறைவேறியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட வள்ளியாற்றின் குறுக்கே முட்டம் சாலையில் இருந்து தலக்குளம் செல்லும் வழியில் ஏற்கெனவே இருந்த பாலம் மிகவும் பலவீனமாக இருந்தது. இதற்குப் பதிலாக புதிய பாலம் கட்டப்பட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் நெடுநாள் கோரிக்கை விடுத்துவந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு, இந்தப் பாலம் கட்ட 2.65 கோடி ரூபாய் ஒதுக்கியது. இதனைத் தொடர்ந்து இணைப்புச்சாலை, பக்கச்சுவர்கள் ஆகியவற்றைக் கொண்ட உயர்மட்ட பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பாலத்தை இன்று அமைச்சர் மனோதங்கராஜ் திறந்துவைத்தார்.
மோசமான பாலத்தால் கனரக வாகனங்கள் செல்லமுடியாத நிலை நிலவியது. அதேபோல் இந்த பாலம் சேதமாகிக் கிடந்ததால் ஆபத்து ஏற்படும் அபாயமும் இருந்தது. இதனிடையே நெடுநாள் கோரிக்கை நிறைவேறியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.