`கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது'

ஹிஜாப் தடைக்கு எதிராக புது கல்லூரி மாணவர்கள் போராட்டம்
`கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது'

"ஜனநாயகத்துக்கு எதிரான ஒரு தீர்ப்பை கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும், பிற கல்லூரி மாணவர்களையும் ஒன்று திரட்டி ஜல்லிக்கட்டு போராட்டத்தைவிட வலிமையான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் சென்னை புது கல்லூரி மாணவர் சங்க தலைவர் முகமது தாஹீர் கூறினார்.

கர்நாடக மாநிலத்தில் அரசு கல்லூரியில் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்ததை காரணம் காட்டி கல்லூரி நிர்வாகம் அவர்களை வெளியேற்றியது. இது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 6 கல்லூரி மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி அமர்வு இன்று காலை தீர்ப்பு வழங்கியது. அதில் ஹிஜாப் அணிவது சீருடை சட்டத்துக்கு எதிரானது என்றும், இஸ்லாமிய மத வழக்கப்படி பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமில்லை என்றும் கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணிய விதித்த தடை செல்லும் என்றும் தீர்ப்பை வழங்கியது.

இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள புது கல்லூரி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் திடீர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது மாணவர்கள் மத்திய அரசு மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

போராட்டத்துக்கு இடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புது கல்லூரி மாணவர் சங்க தலைவர் முகமது தாஹீர், "ஜனநாயகத்துக்கு எதிரான ஒரு தீர்ப்பை கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும், ஒன்றிய அரசு தொடர்ந்து இஸ்லாமிய மதத்தினருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், இதற்கு முன்பு டர்பன் அணிவதற்கு எதிராக வழக்கு நடைபெற்ற போது மத நம்பிக்கைகளை அனைவரும் கடைபிடிக்க உரிமை உள்ளது எனக்கூறியவர்கள் இன்று இஸ்லாமியர்கள் என்பதால் ஹிஜாபை ஆதரிக்காமல் வாயடைத்திருப்பதாகவும், சட்டத்தை படிக்காமல் இஸ்லாமியர்களை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஒன்றிய அரசு ஆட்சி நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஹிஜாப் அணிவது சீருடை சட்டத்துக்கு எதிரானதல்ல எனவும், மதம் சார்ந்த நம்பிக்கைகளை கடைபிடிக்க இஸ்லாமியர்களுக்கும் உரிமை உள்ளது எனவும் இந்த தீர்ப்பு ரத்து செய்யப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும் எனவும், தங்கள் சார்பில் பிற கல்லூரி மாணவர்களையும் ஒன்று திரட்டி ஜல்லிக்கட்டு போராட்டத்தைவிட வலிமையான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் மாணவர்களின் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடர்ந்து கல்லூரி வளாகம் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டு அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in