பட்டா நிலங்களில் வீடுகட்ட முடியாமல் தவிக்கும் நாகர்கோவில் மக்கள்

மூச்சுமுட்ட வைக்கும் விதிமுறைகள் தளர்த்தப்படுமா?
பட்டா நிலங்களில் வீடுகட்ட முடியாமல் தவிக்கும் நாகர்கோவில் மக்கள்
நாகர்கோவில் மாநகராட்சி

சொந்த இடம் இல்லாதவர்களே வீடுகட்டிக் குடியேறும்வகையில் அரசு குடிசை மாற்று வாரியம், பிரதமரின் வீடுகட்டும் திட்டம் என பல்வேறு சமூக நலத்திட்டங்களின் வாயிலாக நேசக்கரம் நீட்டிவருகிறது.

ஆனால், நாகர்கோவில் மாநகராட்சியிலோ முறையான பட்டா நிலம் இருந்தும் தெருக்கள் போதிய அளவுக்கு அகலம் இல்லை என வீடுகட்ட அனுமதி மறுக்கப்படுகிறது. சொந்தமாக நிலம்தான் வாங்கமுடியும். தெருவையா வாங்கமுடியும்? என ஏக்கக்குரல் எழுப்புகின்றனர் நாகர்கோவில் மக்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரம், தமிழகத்திலேயே படித்தவர்கள் நிறைந்த பகுதி என பல்வேறு சிறப்புகளைக் கொண்டது நாகர்கோவில். நகராட்சியாக இருந்துவந்த நாகர்கோவிலை, கடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு அருகாமையில் உள்ள ஊராட்சி, பேரூராட்சிகளையும் இணைக்கும்வகையில் கருத்துக்கேட்புக் கூட்டங்களும் நடந்துவருகின்றன. ஊராட்சிகளை, மாநகராட்சியோடு இணைப்பதால் 100 நாள் வேலைத்திட்டமும் பறிபோகும் என ஊராட்சிகளில் வாழும் விளிம்புநிலை மக்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் பட்டா நிலங்களில் வீடுகட்டுவதற்கே பல சிக்கல்களைச் சந்திக்கும் சூழல் எழுந்துள்ளது.

இதுகுறித்து நாகர்கோவிலைச் சேர்ந்த எம்.எஸ்.குமார் கூறும்போது, ‘‘பழைய வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டும்போதும், இடம் வாங்கிப் புதிய கட்டுமானங்கள் எழுப்பும்போதும் மாநகராட்சியிடம் வரைபட அனுமதிபெற வேண்டும். இதுதொடர்பான விண்ணப்பங்கள் நகரமைப்புப் பிரிவில் ஏராளமாகத் தேங்கிக் கிடக்கிறது. ஆனால் விண்ணப்பங்கள் திடீரென நிராகரிக்கப்பட்டுவிடுகின்றன. இதுகுறித்துக் கேட்டால், மாநகரப் பகுதிகளில் சாலை 10 அடி அகலம் இருந்தால் மட்டுமே புதிய கட்டுமானத்துக்கு அனுமதி கொடுக்கப்படும் எனச் சொல்கிறார்கள். இதனால் பெருமழை, வெள்ளத்தால் சேதமான வீடுகளைக்கூட இடித்துவிட்டு மீண்டும் கட்டி எழுப்ப முடியாத சூழல் உள்ளது. வீடுகட்டுவதற்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறுவதற்கு மாநகராட்சியின் வரைபட அனுமதியை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் சாலையை காரணம்காட்டி வரைபட அனுமதி தர மறுப்பதால், எளிய மக்களின் வீடுகட்டும் கனவே தகர்ந்து வருகிறது.

50 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியமிக்க வீடுகள் பழுதாகி மறுகட்டுமானம் செய்ய விண்ணப்பித்தும், மாநகராட்சி ஆனதும் சாலை அகலம் இல்லை என பிளான் அப்ரூவல் தரமறுக்கிறார்கள். இத்தனைக்கும் இந்த வீடுகள் நகராட்சிக்கு உரிய வரியை காலம், காலமாக கட்டிவந்தவையே! புதிதாக உதயமாகும் குடியிருப்புகளுக்கும், மனைகளுக்கும் இப்படி விதி வைத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். நீண்டகாலமாக இருக்கும் வீட்டை இடித்துக்கட்ட முடியாது என்றால், அந்த வீட்டில் இருந்தவர்கள் தங்கள் அடையாளத்தை விட்டுவிட்டு எங்கே செல்வார்கள்? இது சொந்த மண்ணிலேயே மக்களை அகதியாக்கிவிடும் அல்லவா?’’ என்கிறார்.

தளவாய் சுந்தரம் எம்எல்ஏ
தளவாய் சுந்தரம் எம்எல்ஏ

அரசுக்குத் தெரியாதா?

மக்கள் அடர்த்தி அதிகமுள்ள நகரங்களில் நாகர்கோவிலும் ஒன்று. இங்குள்ள பெரும்பாலான மாநகரச் சாலைகள் மிகவும் குறுகலானவை. பத்து அடி அகலத்துக்கும் குறைவானவை. திருவிதாங்கூர் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் ராஜபாதையாக இருந்த தேசிய நெடுஞ்சாலைகளே இப்போது அகலம் குறைந்து காணப்படுகின்றன. இப்படியான சூழலில் பட்டா நிலம்தான் மக்களுக்குச் சொந்தம். அதன் நிறைகுறைகளை அவர் போக்கிவிட்டு வரைபட அனுமதிக்கு அணுகமுடியும். ஆனால் தெருவை அகலம் இல்லை என ஏற்கெனவே இருக்கும் வீடுகளை, மறுகட்டமைப்பு செய்யவிடாமல் தடுப்பது ஏற்புடையதல்ல.

‘‘இந்தச் சட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அவர்களால் தான் நாகர்கோவில்வாசிகள் வீடுகட்ட முடியாமல் சிரமங்களை அனுபவிக்கின்றனர்’’ என திமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் குற்றச்சாட்டைக் கிளப்பினார். இதற்கு பதில் அளித்திருக்கும் முன்னாள் அதிமுக அமைச்சரும், கன்னியாகுமரி எம்எல்ஏவுமான தளவாய் சுந்தரம், “2019-ம் ஆண்டின் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதி 2019-ன் பிரிவு 30(1)-ன் படி, உள்ளாட்சிகளால் அறிவிப்பு செய்த பகுதியை நகர் ஊரமைப்பு இயக்குநர் அல்லது அரசால் அனுமதிபெற்று தொடர் கட்டுமானப் பகுதியாக நிர்ணயம் செய்யவும், விதி 35(3)-ல் ஏற்கெனவே வளர்ச்சி அடைந்த பகுதிக்கு தெரு 5 அடி அகலம் இருந்தால் போதும் எனவும் தளர்வுகள் உள்ளது” என்கிறார்.

ஆனால், விதிகளை மட்டுமே முன்வைத்து மாநகராட்சி நிராகரித்துவிடுகிறது. தளர்வுகளுக்கு ஊரமைப்பு இயக்குநர் அல்லது அரசிடம் அனுமதிபெற வேண்டும். அப்படி அனுமதிபெறுவதிலும் சிக்கல் நீடிக்கிறது. இதனால் இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கின்றனர் நாகர்கோவில்வாசிகள். 2019-ம் ஆண்டிலிருந்தே அரசு இயந்திரம், கரோனாவை எதிர்கொள்வதிலேயே முழுமூச்சில் ஈடுபடுவதால் இந்தச் சட்டம் பற்றி அரசு அதிகாரிகள் மட்டத்திலும் தெளிவு இல்லை.

இவ்விவகாரம் குறித்து நாகர்கோவில் மாநகராட்சி தரப்பில் கேட்டபோது, ‘‘800 சதுர அடியில் வீடுகட்ட வேண்டும் என்றால்கூட கட்டிட வரைபடத்துக்கு மாநகராட்சிக்கு ரூ.50 ஆயிரம் வரை கட்டணமாகச் செலுத்துவார்கள். நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் சாலை 10 அடி அகலம் இல்லாததால் கிடப்பில் கிடக்கிறது. அரசுதான், ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் மாநகராட்சியிடம் அப்ரூவல் பெறுவதில் தளர்வுகள் செய்யமுடியும். அப்படி தளர்த்துவதன் மூலம் மாநகராட்சிக்கும் வரைபட அனுமதி கொடுப்பதன் மூலம் வரிவருவாய் உயரும்” என்கின்றனர்.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளானது, புதிய மனைகள் அமைத்து வீடுகட்டுபவர்களுக்கு பொருந்தினால் ஏற்புடையது. காலம், காலமாக வாழ்ந்துவரும் வீட்டை மறுகட்டுமானம் செய்யவும் அந்தச் சட்டம் குறுக்கே நிற்பது, சொந்த மண்ணில் பலரையும் அகதிகளாக்கி வருவது துயரமானதுதான்!

Related Stories

No stories found.