முருகனுக்கு கோட்டம் அமைத்தது ஏன்? - கவிஞர் அறிவுமதி விளக்கம்

முருகனுக்கு கோட்டம் அமைத்தது ஏன்? -  கவிஞர் அறிவுமதி விளக்கம்
முருகன் கோட்டத்தில் அறிவுமதி...

பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி தனது சொந்த ஊரில் முருகன் கோட்டம் ஒன்றை அமைத்து பங்குனி உத்திர தினமான இன்று அதை நடைமுறை வழிபாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

சென்னைவாசியான கவிஞர் அறிவுமதி கரோனாவின் ஆரம்ப நாட்களிலேயே சென்னையில் தங்கி இருக்காமல் தனது சொந்த ஊரான விருத்தாசலம் அருகே உள்ள சு.கீணனூர் கிராமத்திற்கு வந்து விட்டார். அங்கு தனது வயல் வெளியில் உயிர் தமிழ் ஆய்வகம் என்ற பெயரில் அழகான நூலகம் ஒன்றை அமைத்து அதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட்டிருக்கிறார்.

மரங்கள் நிறைந்துள்ள அழகு வெளியான அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தின் கீழ் முருகன் கோட்டம் ஒன்றை அமைத்திருக்கிறார். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் முருகன் எவ்வகையான தோற்றத்தை கொண்டிருந்தாரோ அந்த தோற்றத்தை குறிப்பிடும் வகையில் இந்த சிற்பம் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. முருகனோடு வள்ளியும் முருகன் கோட்டத்தில் வலமிருக்கிறார். இரண்டடி உயரத்தில் ஒரு அடி அகலத்தில் இந்த சிலைகள் அமைந்துள்ளன. மகாபலிபுரத்தை சேர்ந்த பாஸ்கர் என்ற சிற்பி இச்சிலைகளை உருவாக்கி இருக்கிறார்.

முருகன் வள்ளி சிலைகள்
முருகன் வள்ளி சிலைகள்

இதுகுறித்து கவிஞர் அறிவுமதியிடம் பேசியபோது, "சங்க இலக்கியங்களில் யானை மீது அமர்ந்து போரிடும் ஒரு வீரனாக முருகனை குறிப்பிட்டுள்ளார்கள். தமிழர்கள் வழிபட்ட கொற்றவையின் மகனாக முருகனும் முருகனின் மனைவியாக வள்ளியும் குறிப்பிடப்படுகிறார்கள். அவ்வகையில் அந்த இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளபடி இந்த முருகன், வள்ளி சிலைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கொடும்பாளூர் மூவர் கோயிலில் இந்த சிற்பங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதை பார்த்து அவ்வண்ணமே இந்த சிலைகளும் செய்யப்பட்டு இருக்கின்றன. முருகனுக்கு கோட்டம் அமைத்ததில் தனியாக வேறெந்த நோக்கமும் இல்லை" என்றார்.

Related Stories

No stories found.