மகள்களை காப்பாற்றிவிட்டார்... தன் உயிரை இழந்துவிட்டார்: கண்கலங்க வைத்த தாயின் மரணம்

மகள்களை காப்பாற்றிவிட்டார்... தன் உயிரை இழந்துவிட்டார்: கண்கலங்க வைத்த தாயின் மரணம்
ஸ்டெல்லா

குளத்தில் மூழ்கிய தனது இரு மகள்களை காப்பாற்ற குளத்தில் குதித்த தாய் அவர்களை காப்பாற்றிவிட்டு, அம்முயற்சியில் தன் உயிரை இழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வாழைக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வின்சன்ட். இவரது மனைவி ஸ்டெல்லா(47) இன்று காலை தனது இரண்டு பெண் குழந்தைகள் பெனினால், வின்சி ஆகியோருடன் அதே பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார்.

மூவரும் கரையில் நின்று குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது இளைய மகள் பெனினால் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினார். அதனைப் பார்த்த மூத்த மகள் வின்சி உடனடியாக குளத்தில் குதித்து நீரில் மூழ்கிய தங்கையை காப்பாற்ற முயன்றார். ஆனால் இருவருமே கரைக்கு வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர். இதனால் செய்வதறியாது திகைத்த ஸ்டெல்லா உடனடியாக தண்ணீரில் சென்று மகள்கள் இருவரையும் தூக்கி கரைக்கு அருகில் கொண்டு வந்தார்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் ஓடிவந்து இரு பெண் குழந்தைகளையும் கரைக்கு தூக்கி காப்பாற்றியுள்ளனர். ஆனால் அதற்குள் ஸ்டெல்லா தண்ணீரில் மூழ்கிவிட்டார். குழந்தைகளை தூக்கிய இளைஞர்கள் ஸ்டெல்லாவை காப்பாற்ற முயன்றனர். நீச்சல் அடித்து சென்று ஸ்டெல்லாவை மீட்டனர். அவரை அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.


இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இரு மகள்களை காப்பாற்றிவிட்டு தாய் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in