பாராமுகத்தால் பாழாகும் அரசு நவீன அரிசி ஆலை!
எருக்கூர் நவீன அரிசி ஆலை

பாராமுகத்தால் பாழாகும் அரசு நவீன அரிசி ஆலை!

மனம் வெதும்பும் மயிலாடுதுறை மாவட்ட மக்கள்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே எருக்கூரில் இயங்கிவரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை, போதுமான பராமரிப்பின்றி பாழாகிவருவதாக மக்கள் வருந்துகிறார்கள். 1987-ல், அப்போதைய முதல்வர் எம்ஜிஆரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த நவீன அரிசி ஆலையில், இப்பகுதி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அரவை செய்யப்பட்டு அரிசியாக ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்படுகின்றது.

இங்குள்ள பழைய 2 அரவை இயந்திரங்களும், 100 டன் அளவு நெல் அரைக்கும் திறன்பெற்றவை. அதில் ஒன்று சரிவர இயங்கவில்லை. அத்துடன் கடந்த ஆட்சியின்போது, ஆலையில் 3,125 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 16 நவீன தானியங்கி நெல் சேமிப்புக் கலன்கள் அமைக்கப்பட்டன. சுமார் ரூ.64 கோடியே 27 லட்சம் மதிப்பிலான அவை, இன்னும் இயக்கப்படாமல் பயனற்று உள்ளன.

ஆலையில் ஆய்வு செய்யும் அப்பர்சுந்தரம்
ஆலையில் ஆய்வு செய்யும் அப்பர்சுந்தரம்

மயிலாடுதுறை மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக கண்காணிப்புக்குழு உறுப்பினர் அ.அப்பர்சுந்தரம், அண்மையில் ரேஷன் கடைகளில் மேற்கொண்ட ஆய்வுகளின்போது ரேஷன் கடைகளுக்கு வருகின்ற அரிசி தரமற்றதாக, உண்பதற்கே தகுதியற்ற நிலையில் உள்ளதாக மக்கள் புகார் தெரிவித்தனர். அதையடுத்து அரிசி அரவை செய்யப்படும் எருக்கூர் நவீன அரிசி ஆலையில், அவர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின்போதுதான், ஆலை பராமரிப்பே இல்லாமல் பாழடைந்து கிடப்பது அவருக்கு தெரியவந்திருக்கிறது.

அதைப்பற்றி அவர் மிகுந்த மனவேதனையுடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். ’’ஒருநாளைக்கு 100 டன் அளவிற்கு நெல் அரவை செய்யவேண்டிய இந்த ஆலையில், பராமரிப்பு இல்லாத காரணத்தால் சுமார் 40 டன் மட்டுமே அரவை செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக எவ்விதப் பராமரிப்பும் இல்லாமல் அலுவலகக் கட்டிடம் முதல் அரிசி ஆலைவரை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. உட்புறச் சாலைகள் அத்தனையும் சேதமடைந்து சேறும் சகதியுமாக, குண்டும் குழியுமாக மாறிவிட்டது. சுற்றுச்சுவர் முழுவதும் பாசிபிடித்து, செடிகொடிகள் மண்டிக்கிடக்கின்றன.

நெல் அரைக்கும் இடம்
நெல் அரைக்கும் இடம்

சாலை மற்றும் உட்புறப்பகுதிகள் அனைத்திலும் தேவையற்ற செடிகொடிகள் மண்டிக் கிடக்கின்றன. இரவு நேரங்களில் உரிய மின் விளக்கு வசதி இல்லாததால் விஷ ஜந்துக்களின் தாக்குதலுக்கு தொழிலாளர்கள் ஆளாகின்றனர். அலுவலகக் கட்டிடம் பொலிவிழந்து வலுவிழந்து ஆங்காங்கே விரிசலுற்று சேதமடைந்துள்ளது. அங்குள்ள தொழிலாளர்களின் ஓய்வறை, உணவறை, கழிவறைகள் மிகமிக மோசமாக சுகாதாரச் சீர்கேட்டின் உச்சமாக உள்ளன.

நெல் அரவை இயந்திரத்தின் மேற்புறம், மழைநீர் உட்புகாமல் இருப்பதற்கான ஷெட் முழுமையாக இல்லாததால் நெல் மழையில் நனைகிறது. அந்த இடத்தில் பணியாற்றுகின்ற சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதி வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. தொழிலாளர்கள் முகக் கவசம் இன்றியும் பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமலும் இருப்பதால், நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளது. தொழிலாளர்கள் பணிமுடிந்து குளிப்பதற்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை.

அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தவிடு மூட்டைகள்
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தவிடு மூட்டைகள்

நெல் அரவை செய்தபின் கிடைக்கும் தூசு மற்றும் தவிடு மூட்டைகள் மலைபோலத் தேங்கிக்கிடக்கின்றன. வெளியில் தவிட்டுக்கு அதிக தேவை இருந்தும்கூட, ஏனோ டெண்டர் விடாமல் அப்படியே அடுக்கி வைத்திருக்கின்றனர். அந்த மூட்டைகள் சரிந்து விழுந்தால் தொழிலாளர் உயிரிழக்கவும் வாய்ப்புள்ளது. பலகோடி மதிப்பிலான இந்த ஆலை பயனற்றுப் போய்விடாமல் தடுக்க, நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உடனடியாக நேரில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என் விளக்கமாகச் சொன்னார் அப்பர் சுந்தரம்.

சேறும் சகதியுமான உட்புறச் சாலைகள்
சேறும் சகதியுமான உட்புறச் சாலைகள்

இதுகுறித்து நாகை மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் தரப்பில் கேட்டபோது, ‘’புதிய கொள்கலன்களை செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதில் இன்னும் 5 சதவீத பணிகளை முடிக்க வேண்டியுள்ளது. அவை முடிந்து விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும். ரூ.6 கோடி மதிப்பீட்டில் ஆலையை முழுமையாகச் சீரமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. விரைவில் அனைத்தும் சரியாகிவிடும்” என்று விளக்கம் கொடுத்தார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in