`வாடகை நான் கொடுக்கிறேன், அலுவலகத்தை மாற்றாதீங்க'

மின்வாரியத்திடம் உறுதியளிக்கும் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ
`வாடகை நான் கொடுக்கிறேன், அலுவலகத்தை மாற்றாதீங்க'

``ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் இயங்கி வரும் இளநிலை மின் பொறியாளர் அலுவலகத்தினை மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும்'' என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என். தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்குட்பட்ட குமாரபுரம் பகுதியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் திருநெல்வேலியில் இயங்கிவரும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் மற்றும் வள்ளியூரில் இயங்கி வரும் நிர்வாக பொறியாளர் அலுவலகம் மற்றும் பணகுடியில் இயங்கி வரும் உதவி இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றின் கீழ் பெருங்குடி இளநிலை மின் பொறியாளர் (வினியோகம்) அலுவலகம், குமாரபுரம் பகுதியில் குமாரபுரம் - வடக்கன்குளம் செல்லும் சாலையில் அரசு உயர்நிலை பள்ளியின் எதிரே உள்ள ஒரு கட்டிடத்தில் இயங்கி வருகிறது

இந்த அலுவலகமானது இப்பகுதியில் சுமார் 26 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் மூலம் குமாரபுரம், தெற்கு குமாரபுரம், கண்ணப்ப நல்லூர், கண்ணு பொத்தை போன்ற பகுதிகளை சார்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட வீட்டுமின் இணைப்பு பயனாளிகள் மற்றும் விவசாய மின் இணைப்பு பயனாளிகள் மற்றும் இப்பகுதி சுற்றுவட்டார பகுதியில் இயங்கி வரும் காற்றாலை நிறுவனத்தினரும் இந்த அலுவலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது திமுக அரசு பதவியேற்றவுடன் வாடகை கட்டிடத்தில் இயங்குவதாக ஒரு காரணத்தை கூறிக்கொண்டு கடந்த 26 ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரத்தில் பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக செயல்பட்டுவந்த இந்த அலுவலகத்தை இப்பகுதியில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் ஆவரைகுளம் பகுதிக்கு மாற்ற அதிகாரிகளின் துணையுடன் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கட்டிடத்தின் வாடகையினை காரணமாக கூறி மாற்றும் நிலையில் இக்கட்டிடத்திற்கான மாத வாடகையினை நானே முன்வந்து கொடுக்க தயாராக உள்ளேன். எனவே மக்களின் நலனுக்கு எதிராகவும் விருப்பத்திற்கு எதிராகவும் எடுக்கப்பட்டு வருகின்ற இந்த முடிவு மிகவும் கண்டிக்கதக்கதாக உள்ளது. எனவே அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் குமாரபுரத்தில் இயங்கி வரும் பெருங்குடி இளநிலை மின்பொறியாளர் (விநியோகம் ) அலுவலகத்தை மாற்றும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும். இல்லை என்றால் மக்களின் ஆதரவுடன் இந்த அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். எனவே உடனடியாக அதிகாரிகள் பொதுமக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இக்கட்டிடத்தினை மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in